நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேச முயன்றபோது, அவருக்கான மைக் அணைக்கப்பட்டதால், 'இண்டியா' கூட்டணி உறுப்பினர்கள் அமளியில் இறங்கினர். ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி தலைவர் கார்கேயின் மைக் அணைக்கப்பட்டதால், அங்கும் அமளி ஏற்பட்டது. இதனால் இரண்டு சபைகளும் ஒத்திவைக்கப்பட்டன. ஜனாதிபதி உரை முடிந்த நிலையில், பார்லிமென்டின் இரு சபைகளிலும் நேற்று வழக்கமான அலுவல்கள் துவங்கின. லோக்சபாவில், ஜனாதிபதி உரை மீது விவாதம் நடத்த சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்தார். முறையிட்டார்
அப்போது, நீட் தேர்வு மோசடி மற்றும் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் குறித்து, தாங்கள் அளித்த நோட்டீஸ்கள் என்ன ஆயிற்று என காங்கிரஸ், திரிணமுல், சமாஜ்வாதி, தி.மு.க., உறுப்பினர்கள் கேட்டனர்.அதற்கு சபாநாயகர், ''விவாதத்தில் அது குறித்தும் பேசலாம்,'' என்றார். அப்போது ராகுல் பேச எழுந்தார். எதிர்க்கட்சி தலைவருக்கு வாய்ப்பு தந்தாக வேண்டும் என விதி இருப்பதால், ராகுல் பேச சபாநாயகர் அனுமதித்தார். ஆனால், நீட் தேர்வு... என ராகுல் பேச துவங்கிய உடனே, அவரது மைக் வேலை செய்யவில்லை. ''சார், எனக்கு மைக் இணைப்பு தாருங்கள், துண்டிக்காதீர்கள்,'' என சபாநாயகரிடம் ராகுல் முறையிட்டார். அதற்கு சபாநாயகர், ''மைக் இணைப்பை துண்டிப்பதற்கான பட்டன் எதுவும் என் வசம் இல்லை,'' என்றார்.உடனே இணைப்பு கிடைத்தது. ராகுல் பேச ஆரம்பித்த உடனே மீண்டும் வேலை செய்யவில்லை. இப்படியே மைக் ஆன் ஆவதும், ஆப் ஆவதுமாக இருந்ததால் ராகுல் பேசுவதை நிறுத்தினார். அவரது கட்சியினர் கோஷம் போட்டனர். 'கடந்த ஆட்சியிலும் இப்படி செய்தீர்கள்; இப்போதும் எதிர்க்கட்சியினர் பேச விடாமல், மைக்கை அணைக்கிறீர்கள்; இது அநீதி!' என, குரல் எழுப்பினர். இதையடுத்து, மைக் உயிர் பெற்றது. பேசத் துவங்கிய ராகுல், ''மாணவர்களின் பிரச்னை மிக முக்கியமான விஷயம். இது தொடர்பாக, அரசு தரப்பும், எதிர்க்கட்சிகளும் இணைந்து கூட்டாக ஒரு நல்ல செய்தியை மாணவர்களுக்கு சொல்லியாக வேண்டும். ''அதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும். மாணவர்களின் உணர்வுகளை மதித்து இந்த பிரச்னை குறித்து பிரத்யேகமாக விவாதிக்க வேண்டும்,'' என்றார்.அதற்கு சபாநாயகர், ''ஜனாதிபதி உரை மீதான விவாதம் பலமணி நேரம் நடக்கப்போகிறது. அதில் உங்கள் அனைவருக்குமே நேரம் வழங்கப்படும். அப்போது, நீங்கள் குறிப்பிடும் பிரச்னை குறித்து விரிவாக பேசுங்கள். அதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. நீங்கள் மூத்த தலைவர். புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்,” என்றார்.அப்போது ஆளும் தரப்பிலும் குரல்கள் எழுந்தன. அந்த பக்கம் திரும்பிய சபாநாயகர், ''அரசு தரப்பிடமும் கேட்டுக் கொள்கிறேன். இது முக்கியமான பிரச்னை. எனவே, இவ்விஷயத்தில் அரசு உரிய பதில் தர வேண்டும். எனவே, ஜனாதிபதி உரை மீதான விவாதத்துக்கு வழிவிடுங்கள்,'' என்றார். எதிர்க்கட்சிகள் அதை ஏற்கவில்லை. 'ஜனாதிபதி உரையை விட நீட் லீக் விவகாரம் அவசர முக்கியத்துவம் வாய்ந்தது. அதை முதலில் விவாதிக்க வேண்டும்' என வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆளும் தரப்பில் எதிர் கோஷங்கள் எழுந்தன. கண்டிக்கத்தக்கது
அமளியால் சபையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். நண்பகல் 12:00 மணிக்கு சபை மீண்டும் கூடியபோதும் அமளி தொடர்ந்தது. பார்லிமென்ட் விவகார துறையின் அமைச்சர் கிரன் ரிஜுஜு, ''எதுவாக இருந்தாலும் ஜனாதிபதி உரை மீதான விவாதத்தில் பேசுங்கள். தனியாக பேச முடியாது. சபையின் மாண்பை குறைக்க முயற்சி செய்கிறீர்கள். இது கண்டிக்கத்தக்கது,'' என்றார்.அதை ஏற்காத எதிர்க்கட்சியினர், கோஷம் எழுப்பியபடி சபையின் மையப்பகுதியில் இறங்கினர். இதனால் கோபம் அடைந்த சபாநாயகர், ''மக்கள் உங்களை தேர்ந்தெடுத்தது கோஷம் போடுவதற்கு அல்ல. வீதியில்நடத்தும் போராட்டத்திற்கும், சபையில் போராடுவதற்கும் வித்தியாசம் உள்ளது. உங்களுக்கு உண்மையில் நீட் பிரச்னை குறித்து பேச விருப்பம் இல்லையா,'' என்றார்.எதிர்க்கட்சிகள் அதை காதில் வாங்காமல் கோஷம் போட்டதால், சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துவிட்டு சபாநாயகர் கிளம்பினார். ராஜ்யசபாவிலும்...
ராஜ்ய சபாவிலும், சபை துவங்கியதுமே, 'விதி எண் 267 ன் கீழ், ஏனைய அலுவல்களை ரத்து செய்துவிட்டு, நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதம் நடத்த வேண்டும்' என்று எதிர்க்கட்சியினர் கேட்டனர். தாங்கள் கொடுத்திருந்த நோட்டீஸ்கள் என்ன ஆயிற்று என குரல் எழுப்பினர்.சபை தலைவர் ஜகதீப் தன்கர், ''நீட் முறைகேடு குறித்து விவாதிக்க வேண்டம் என்று 22 நோட்டீஸ்கள் வந்துள்ளன. நீட் முறைகேடு குறித்து விசாரனை நடத்தப்படும் என ஜனாதிபதி உரையின் 20வது பாராவில் குறிப்பிட்டுள்ளது,'' என்றார்.எதிர்க்கட்சி தலைவர் கார்கே, ''கடந்த ஏழு ஆண்டுகளில் 70 தடவைக்கு மேல் நீட் வினாத்தாள் கசிவு நடந்துள்ளது. மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைவிட விவாதிக்க வேறு என்ன காரணம் தேவை,'' என்று கேட்டார். பேச்சை முடிப்பதற்குள் அவரது மைக் ஆப் ஆனது. இதனால் எதிர்க்கட்சிகள் பக்கம் சலசலப்பு அதிகமானது. சபையின் மைய பகுதிக்குள் இறங்கும்படி திரிணமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் கூற, அதை கண்ட ஜக்தீப் தன்கர் கோபமாகி, ''மிஸ்டர் டெரிக். நீங்கள் என்ன சினிமா டைரக்டரா, அமளி ஏற்படுத்தும்படி உறுப்பினர்களை இயக்குறீர்களே,'' என்று கண்டித்து, சபையை ஒத்திவைத்தார்.மீண்டும் சபை கூடியபோது, முன்னாள் பிரதமர் தேவ கவுடா, ''நீட் பிரச்னையில் சரியான நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. இப்பிரச்னையில் யாரையும் பொறுப்பாளி ஆக்க முடியாது. விசாரணை முடியட்டும்,'' என்றார். இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த எதிர்கட்சிகள் மீண்டும் அமளியில் இறங்கவே, சபை மறுபடியும் ஒத்திவைக்கப்பட்டது. சபை மீண்டும் கூடியதும், ஜனாதிபதி உரையின் மீது விவாதம் துவங்குவதாக தன்கர் அறிவித்தார். தங்கள் கோரிக்கையை ஏற்குமாறு கார்கே வலியுறுத்தினார். ஆனால் தன்கர் அவர் பக்கமே திரும்பவில்லை. மைக்கும் வேலை செய்யாததால் கார்கே கடுப்பானார். முதல் முறையாக அவரே சபையின் மையப்பகுதியில் இறங்கினார். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குரல்கள் உச்சம் தொட்டன. ஆளும் தரப்பில் பதில் கோஷம் எழுப்பினர். பரபரப்பு அதிகரித்ததால், சபையை ஒத்திவைப்பதாக அறிவித்து தன்கர் வெளியேறினார். மீண்டும் கூடியபோது, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. அதன் பின் ஜனாதிபதி உரை மீதான விவாதம் நடந்தது. பொதுவாக சபையின் மைய பகுதிக்குள் தலைவர்கள் இறங்குவது இல்லை. கடந்த 2019ல் காஷ்மீருக்கு தனி அந்தஸ்தை ரத்து செய்வதர்கான தீர்மானம் தாக்கலானபோது, அன்றைய எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் கோஷமிட்டபடி மையப்பகுதிக்கு சென்றார். அடுத்து மையம் கண்ட தலைவர் கார்கே.என் தவறு அல்ல!நான் திரும்ப திரும்ப சபைத் தலைவரை அழைத்தேன். என் பக்கம் முகத்தை திருப்பவே மறுக்கிறார். அவரது கவனத்தை என் பக்கம் ஈர்க்க எவ்வளவோ முயன்றேன். ஆனால், அவர் ஆளும் தரப்பை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார். விதிகளின்படி என் பக்கம் அவர் திரும்ப வேண்டும். வேண்டுமென்றே அவமதிக்கும் வகையில் என்னை புறக்கணித்தார். இதனால், சபையின் மையப்பகுதிக்கு செல்வதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. தவறு என்னுடையதல்ல. கார்கே, எதிர்க்கட்சி தலைவர், ராஜ்யசபா
மயங்கி விழுந்த எம்.பி.,
ராஜ்யசபாவில் மதியம் அமளி நடந்து கொண்டிருந்தபோது, காங்கிரஸ் எம்.பி.,புலோ தேவி நெதம் திடீரென மயங்கினார். சட்டென கவனித்த சபைத் தலைவர் ஜக்தீப் தன்கர், சபையை ஒத்திவைத்ததை அடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்த அழுத்தம் அதிகமானதால் ஸ்ட்ரோக் ஏற்பட்டுள்ளதாகவும், சில நாட்கள் சிகிச்சையில் இருக்க வேண்டுமென்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். - நமது டில்லி நிருபர் -