சீதாராம் யெச்சூரி உடலுக்கு கட்சி தலைவர்கள் அஞ்சலி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
உடல் நலக்குறைவால் காலமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரியின் உடல், டில்லி எய்ம்ஸ் மருத்துவனைக்கு மருத்துவ ஆராய்ச்சிக்காக தானமாக வழங்கப்பட்டது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், பொதுச் செயலருமான சீதாராம் யெச்சூரி, 72, உடல் நலக்குறைவு காரணமாக, 12ல் டில்லியில் காலமானார். இந்நிலையில், அவரது உடல் டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலையில் மாணவர்களின் அஞ்சலிக்காக நேற்று முன்தினம் மாலை வைக்கப்பட்டது. அதன்பின், அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பா.ஜ., தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.இதையடுத்து டில்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூ., தலைமை அலுவலகத்தில் அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், ஆம் ஆத்மி மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.தி.மு.க., சார்பில் எம்.பி.,க்கள் பாலு, ராஜா, கனிமொழி, தயாநிதி உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.இதன்பின், சீதாராம் யெச்சூரியின் உடல், நேற்று மாலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மருத்துவ ஆராய்ச்சிக்காக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது - நமது டில்லி நிருபர் -.