| ADDED : ஆக 10, 2024 11:40 PM
சாபாவ்லோ: பிரேசில் பயணியர் விமானம் நேற்று முன்தினம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன், 61 பேருடன் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் பயணிக்க வேண்டிய பயணி ஒருவர் தாமதமாக வந்ததால், விபத்தில் இருந்து தப்பி உயிர் பிழைத்துள்ளார். தென் அமெரிக்க நாடான பிரேசிலின், பரானா மாகாணத்தில் உள்ள காஸ்கேவல் நகரிலிருந்து 'வோபாஸ் ஏ.டி.ஆர்., - 72' என்ற விமானம், 57 பயணியர் மற்றும் நான்கு பணியாளர்கள் என மொத்தம் 61 பேருடன், சாபாவ்லோ மாகாணத்தில் உள்ள குவாருலுஸ் நகருக்கு நேற்று முன்தினம் சென்றது.தரையிறங்குவதற்கு 15 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், வினெடோ நகர் மேலே பறந்து கொண்டிருந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து, வட்டமடித்தபடி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், பயணியர் அனைவரும் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் கருத்தரங்கில் பங்கேற்க வந்த மருத்துவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த விமானத்தில் பயணிக்க இருந்த ரியோ டி ஜெனிரோவைச் சேர்ந்த அட்ரியானோ என்பவர், 'போர்டிங்' நேரம் முடிந்த பின் விமான நிலை நுழைவாயிலுக்கு வந்துள்ளார். அவரை அங்கிருந்த ஊழியர் அனுமதிக்க மறுத்துவிட்டார். அவரிடம் அட்ரியானோ கடுமையாக வாக்குவாதம் செய்தபோதும் விமான நிலைய ஊழியர் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக விமான விபத்தில் இருந்து தப்பி உயிர் பிழைத்தார். இதன்பின், விமான விபத்து குறித்து செய்தி அறிந்த அவர், விமான நிலையத்திற்கு வந்து, தனக்கு அனுமதி மறுத்த ஊழியரை கட்டித் தழுவி கண்கலங்கினார். இதற்கிடையே, விமான விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.