புவனேஸ்வர் :தேர்தல் பிரசாரத்தின்போது, முதல்வர் நவீன் பட்நாயக்கின் கைகளை, அவரது அரசியல் வாரிசாகக் கருதப்படும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி வி.கே.பாண்டியன் கெட்டியாக பிடித்திருக்கும் வீடியோ வெளியாகிஉள்ளது. இதைவைத்து, பாண்டியனுக்கு எதிராக பா.ஜ., தன் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள, 21 லோக்சபா தொகுதிகளுடன், 147 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தலும் நடக்கிறது. அரசியல் வாரிசு
நவீன் பட்நாயக்கின் தனிச் செயலராக பணியாற்றிய, தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி வி.கே.பாண்டியன், அந்த பதவியை ராஜினாமா செய்து, கட்சியில் இணைந்தார். நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளரான அவர், அவருடனேயே பிரசாரத்தில் பங்கேற்று வருகிறார். நவீன் பட்நாயக்கின் அடுத்த அரசியல் வாரிசாக அவர் பார்க்கப்படுகிறார்.நவீன் பட்நாயக், 77, வயது காரணமாக உடல் நடுக்கப் பிரச்னையால் அவதிப்படுகிறார். இது பல நிகழ்ச்சிகளில் வெளிப்படையாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் நவீன் பட்நாயக் பேசுவது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.அதில், நவீன் பட்நாயக்கின் கைகள் நடுங்குவதை மறைக்கும் வகையில், பாண்டியன் அவருடைய கையை உள்ளே பிடித்து இழுக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த தேர்தலில் நவீன் பட்நாயக்கைவிட, பாண்டியனுக்கு எதிராகவே பா.ஜ., பிரசாரம் செய்து வருகிறது. ஆட்சியையும், கட்சியையும் அவர் பறிக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில், இந்த புதிய வீடியோவை வைத்து, தன் தாக்குதலை பா.ஜ., தீவிரப்படுத்தியுள்ளது. மரியாதை
பா.ஜ., மூத்த தலைவரும், அசாம் முதல்வருமான ஹிமந்த பிஸ்வ சர்மா, ''நவீன் பட்நாயக் முழுமையாக பாண்டியனின் கட்டுப்பாட்டில் உள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த ஒரு முன்னாள் அதிகாரி, ஒடிசாவை கட்டுப்படுத்துவதை ஏற்க முடியுமா,'' என, கேள்வி எழுப்பியுள்ளார்.பா.ஜ.,வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மால்வியா கூறியுள்ளதாவது:நவீன் பட்நாயக், ஒடிசாவில் மிகவும் மதிப்புக்குரிய தலைவராக இருந்துள்ளார். தற்போதைய நிலையில், அவரால் தனியாக செயல்பட முடியாத நிலையில் உள்ளார். இதற்காக நாங்கள் வருத்தப்படுகிறோம். இத்தனை ஆண்டுகளாக கொடுத்து வந்த மரியாதையை, இந்தத் தேர்தலிலும் மக்கள் அவருக்கு அளிக்க வேண்டும். மரியாதையுடன் அவருக்கு மக்கள் ஓய்வு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் தெரியவில்லை.
அமித் ஷா நம்பிக்கை
ஒடிசாவில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசியதாவது:ஒடிசாவில் உள்ள, 21 லோக்சபா தொகுதிகளில், 17ல் பா.ஜ., வெற்றி பெறும். மொத்தமுள்ள, 147 சட்டசபை தொகுதிகளில், 75ல் வெற்றி பெறுவோம். ஜூன், 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கைக்குப் பின், நவீன் பட்நாயக், முன்னாள் முதல்வராவார்.நாடு முழுதும், 'ராம் மஹோத்சவ்' கொண்டாடப்பட்டபோது, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும், அவரது அரசியல் வாரிசாகவுள்ள அதிகாரியும் ஒடிசா மக்களை தடுக்க முயன்றனர். ராம பக்தர்களை தடுக்க முயன்றவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டுமா. ஒடிசாவில், தமிழகத்தைச் சேர்ந்தவர் முதல்வராக முடியுமா? ஒடியா மொழி நன்கு தெரிந்த, ஒடிசாவைச் சேர்ந்தவரே முதல்வராவார். அதுபோன்ற இளைஞரை பிரதமர் மோடி, இங்கு பதவியில் அமர்த்துவார். இவ்வாறு அவர் கூறினார்.