பெங்களூரு: காட்டு யானைகள் தாக்குதலை கட்டுப்படுத்த, ஆந்திராவுக்கு கும்கி யானைகளை வழங்கும்படி, அம்மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரேவிடம் வலியுறுத்தினார்.கர்நாடகாவில் மனிதர்களை யானைகள் தாக்கி இறக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதை தடுக்கும் வகையில், கும்கி யானைகள் உதவியுடன் காட்டு யானைகள் பிடிக்கப்படுகின்றன.இதுபோன்று, நம் அண்டை மாநிலமான ஆந்திராவிலும் யானைகள் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. யானைகள் தாக்குதலை தடுக்கும் வகையில், கர்நாடகாவில் இருந்து, கும்கி யானைகள் அனுப்பி வைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த, அம்மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், நேற்று பெங்களூரு வந்தார்.விதான் சவுதாவில், கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரேவுடன் நேற்று அவர் ஆலோசனை நடத்தினார். இரு மாநில வனத்துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.பின், ஈஸ்வர் கன்ட்ரே கூறியதாவது:ஆந்திராவில் காட்டு யானைகள் பிரச்னை அதிகரித்துள்ளது. எனவே அவற்றை கட்டுப்படுத்த, கர்நாடகாவில் இருந்து, கும்கி யானைகளை அனுப்பி வைக்கும்படி பவன் கல்யாண் கேட்டு கொண்டார்.வேறு மாநிலங்களுக்கு யானைகள் வழங்குவது வழக்கம் தான். ஆனால், தசரா யானைகளை எந்த மாநிலத்துக்கும் வழங்க மாட்டோம். ஆந்திராவுக்கு யானைகள் வழங்குவது தொடர்பாக, உயர்மட்ட ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.பவன் கல்யாண் கூறுகையில், ''தெலுங்கு, கன்னட எழுத்துக்கள் ஒரே மாதிரியாக இருக்கும். கன்னட கவிஞர் குவெம்பு, வனம் பற்றி பாடிய பாடல் வரிகள் தான், என்னை கன்னடம் கற்க உத்வேகம் அளித்தது. கன்னட நடிகர் ராஜ்குமார், என்னை போன்றவர்களுக்கு முன் மாதிரியாக திகழ்ந்தவர். திருப்பதி மற்றும் ஸ்ரீசைலம் வழிபாட்டு தலங்களில், கர்நாடக பக்தர்களுக்கு உதவும் வகையில், தங்கும் வசதி ஏற்படுத்த, முதல்வருடன் ஆலோசனை நடத்தி, அமைச்சரவையில் தீர்மானிக்கப்படும்,'' என்றார்.முன்னதாக பவன் கல்யாண், முதல்வர் சித்தராமையாவை சந்தித்து பேசினார்.