லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான பின், டில்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:இந்த லோக்சபா தேர்தல் முடிவுகளில் இருந்து தெரிய வருவதெல்லாம், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான வலுவான தீர்ப்பை மக்கள் வழங்கியுள்ளனர் என்பது மட்டுமே. பெரும் தோல்வி
இது உண்மையில் மக்களின் வெற்றி; ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான வெற்றி என்றே கூற வேண்டும்.சி.பி.ஐ., உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்களையும் கையில் வைத்து, எதிர்க்கட்சிகளை மிரட்டிக் கொண்டிருந்த மோடிக்கு, மிகப்பெரிய தோல்வி கிடைத்துள்ளது.மக்களின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி மிகுந்த பணிவுடன் ஏற்றுக் கொள்கிறது. தன் நடை பயணம் வாயிலாக லட்சக்கணக்கான மக்களை ராகுல் சந்தித்துள்ளார். பா.ஜ., தலைமையின் அகங்காரத்திற்கு விழுந்த அடி தான் இந்த முடிவுகள்.இந்த தேர்தலில் நேர்மறையான பிரசாரத்தை மட்டுமே காங்., மேற்கொண்டது. கூட்டணி கட்சிகளுக்கு நன்றி. எங்கள் பயணம் நிற்காது. அதிகாரத்திற்கு எதிராக ஜனநாயகத்தை காப்பாற்ற தொடர்ந்து போராடுவோம்.இவ்வாறு அவர் கூறினார். இதன்பின் ராகுல் கூறியதாவது:இந்த தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக மட்டுமல்ல; சி.பி.ஐ., அமலாக்கத்துறை, நீதித்துறை என எல்லாவற்றுக்கும் எதிராக சண்டையிட்டோம். மோடிக்கும், அமித் ஷாவுக்கும் எதிராக பயப்படாமல் போராடினோம்.எங்கள் போராட்டத்தின்போது ஒரு சில ஊடகங்கள் கடமையுடன் பணியாற்றின. பல ஊடகங்கள் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டுமென்பதே எங்கள் நோக்கம்.வங்கிக் கணக்கு முடக்கம், முதல்வர்களை சிறையில் தள்ளியது என, பலவற்றுக்கும் மத்தியில் எங்கள் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு அளிப்பர் என நம்பினோம். அது நடந்துள்ளது.கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு மிகவும் நன்றி. அவர்கள் ஒவ்வொருவருக்கும் உரிய மரியாதையை இந்த தேர்தலில் காங்கிரஸ் அளித்தது. நாட்டு மக்களுக்கும் ஒரு தொலைநோக்கு பார்வையை காங்கிரஸ் அளித்தது.மோடி, அமித் ஷா ஆகிய இரட்டையர்கள், இந்த நாட்டை வழிநடத்துவதை மக்கள் விரும்பவில்லை என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன. அந்த மக்களை நினைத்து பெருமை கொள்கிறோம். எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக, கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் டில்லியில் சந்திக்க திட்டமிட்டுள்ளோம். வியூகம்
அந்த தலைவர்களை ஆலோசிக்காமல் எதையும் நாங்களாகவே கூறிவிட முடியாது. ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிறகு தான் எந்த முடிவையும் எடுப்போம்.எங்கள் அணிக்கு பெரும்பான்மை கிடைக்க ஏற்பாடு செய்வது பற்றியோ, அது குறித்த திட்டங்கள், வியூகங்கள் என எதையும் கூறிவிட முடியாது. அவ்வாறு கூறிவிட்டால் மோடி உஷார் ஆகிவிடுவார்.வயநாடு, ரேபரேலி என இரண்டு தொகுதிகளிலும் மக்கள் வெற்றியை தந்துள்ளனர். இதற்காக, அவர்களுக்கு மனப்பூர்வமான நன்றி. எதையாவது ஒரு தொகுதியை விட்டு தர வேண்டும்; எது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.எல்லா மாநில மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் அதேசமயம், அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற நடந்த இந்த முக்கிய தேர்தலில், தங்கள் கடமை உணர்ந்து ஓட்டு போட்ட உ.பி., மாநில மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அதற்கு முக்கிய பங்காற்றிய என் சகோதரி பிரியங்காவுக்கும் நன்றி.இவ்வாறு அவர் கூறினார்.
மோடி ராஜினாமா செய்ய@ மம்தா பானர்ஜி வலியுறுத்தல்@தேர்தல் முடிவுகள் குறித்து, கோல்கட்டாவில் மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று கூறியதாவது:லோக்சபா தேர்தலில், பா.ஜ., தனிப் பெரும்பான்மை கூட பெறவில்லை. நாட்டு மக்களின் நம்பிக்கையை பிரதமர் மோடி இழந்து விட்டார். இதற்கு தார்மீக பொறுப்பேற்று அவர் உடனடியாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மத்தியில் இருந்து அவரை வெளியேற்றும் அதிகாரம், 'இண்டியா' கூட்டணிக்கு உள்ளது. பிரதமர் மோடி பல்வேறு கட்சிகளை பிளவுபடுத்தி உள்ளார். தற்போது அவரது மன உறுதியை நாட்டு மக்கள் உடைத்துள்ளனர். மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க, சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமார் ஆகியோர் காலடியில் மோடி விழுந்து கிடக்கிறார். அராஜக அரசியல் மற்றும் மத்திய விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்திய அரசு, தற்போது தோல்வி அடைந்துள்ளது. நாங்கள் பா.ஜ.,வை சும்மா விட மாட்டோம்; மன்னிக்க மாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.தே.ஜ., கூட்டணியில் நீடிப்போம்:ஐக்கிய ஜனதா தளம் திட்டவட்டம்
மத்தியில் ஆளும் பா.ஜ., தனி பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், அக்கட்சி பெரும்பான்மைக்கு தேவையான 272 தொகுதிகளை பெறவில்லை. மீண்டும் ஆட்சி அமைக்க பா.ஜ.,வுக்கு, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பீஹார் முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் ஆதரவு தேவை.இந்த இரு கட்சிகளுமே தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. இந்நிலையில், பீஹாரின் பாட்னாவில், ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் கே.சி.தியாகி கூறுகையில், ''நாங்கள் தே.ஜ., கூட்டணியில் தான் இருக்கிறோம். அதில் தான் தொடர்வோம். இது தான் எங்கள் நிலைப்பாடு. தே.ஜ., கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக நாங்கள் உள்ளோம்,'' என்றார்.பீஹாரில் 16 தொகுதிகளில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம், 12ல் வெற்றி பெற்றுள்ளது.- நமது டில்லி நிருபர் -