கோர்ட் லோகோ வைக்கவும் சவுக்கு சங்கர் மீதான 17 வழக்குகளை ஒருங்கிணைத்து விசாரிக்கலாமா?
புதுடில்லி:'யு டியூபர் சவுக்கு சங்கர் மீதான 17 வழக்குகளை ஒருங்கிணைத்து விசாரிக்கலாமா?' என, தமிழக அரசிடம், உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.பெண் காவலர்களை அவதுாறாக பேசியது தொடர்பான வழக்கில், யு டியூபர் சவுக்கு சங்கர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். அவர் மீது, 17 வழக்குகள் அடுத்தடுத்து பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து, அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதற்கிடையே, சங்கர் மீதான 17 வழக்குகளில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, கஞ்சா வைத்திருந்த வழக்கில், குண்டர் சட்டத்தில் சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்தும், தன் மீதான 17 வழக்குகளை ரத்து செய்யக் கோரியும், உச்ச நீதிமன்றத்தில் சங்கர் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த அமர்வு, 'வழக்குகளை ரத்து செய்வது தொடர்பாக உயர் நீதிமன்றத்தை ஏன் முதலில் அணுகவில்லை?' என, சங்கர் வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசனிடம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த அவர், ''நாட்டில் பதிவாகும் குண்டர் சட்டங்களில், 51 சதவீதம் தமிழகத்தில் பதிவாகின்றன. இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே நிலுவையில் நிறைய வழக்குகள் இருப்பதால், உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளோம்,'' என்றார். 'சங்கர் மீதான 17 வழக்குகளும், ஒரு குறிப்பிட்ட நேர்காணல் தொடர்பானவையா?' என, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ராவிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 'அப்படி இருந்தால் அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து விசாரிக்கலாம்' என்றனர். இதற்கு பதிலளித்த சித்தார்த் லுத்ரா, ''ஒரு வழக்கு வித்தியாசமானது,'' என்றார். 'அதை மட்டும் விடுத்து, மற்றவற்றை விசாரிக்கலாம். 17 வழக்குகள் தொடர்பான விபரங்களை படித்து பார்த்து, எங்களிடம் கூறுங்கள். ஒரு வழக்கில் நிவாரணம் வழங்கினால், மற்றவற்றில் கைது செய்கிறீர்கள்' என, நீதிபதிகள் தெரிவித்தனர். ''அனைத்து வழக்குகளை ஆய்வு செய்து, அடுத்த விசாரணையின் போது தெரிவிக்கிறேன்,'' என, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை, செப்., 2க்கு ஒத்தி வைக்கப்பட்டது.