| ADDED : மே 29, 2024 02:01 AM
புதுடில்லி, நாடு முழுதும் சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும், விபத்துகளை குறைக்கும் நோக்கத்திலும், மாநில நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற சாலைகளில் இருசக்கர வாகனங்களுக்கு பிரத்யேக வழித்தடத்தை உருவாக்க மத்திய சாலை போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது.நம் நாட்டில், வாகனங்களுக்கு தனித்தனியே வழித்தடங்கள் அமைக்கப்படாததே, சாலை விபத்துகள் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.அரசு புள்ளிவிபரங்களின்படி, நாட்டில் நடக்கும் சாலை விபத்துகளில் 44 சதவீதம் இருசக்கர வாகனங்களால் நிகழ்கிறது. சாலையில் நடந்து செல்வோர், 17 சதவீத விபத்துகளுக்கு காரணமாகின்றனர். இதனால், 19 சதவீத உயிரிழப்புகள் நேர்கின்றன.சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு நடந்து செல்வோர், சைக்கிள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டுனர்களே பெரும்பாலும் காரணமாக உள்ளனர்.இதையடுத்து, சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும், விபத்துகளை குறைக்கவும், 'சேப்' என்ற திட்டத்தின் வாயிலாக சில முன்முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது.இதன் முதற்கட்டமாக, வெளிநாடுகளில் உள்ளது போல, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்களை இயக்குவதற்கு பிரத்யேகமான வழித்தடத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், நடந்து செல்வோர் சாலையை கடப்பதற்கு, குறுக்கு நடை மேம்பாலங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 14,000 கோடி ரூபாய் நிதியில், 9,948 கோடி ரூபாயை மத்திய அரசும், 4,053 கோடி ரூபாயை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் செலவிடும்.