| ADDED : ஜூலை 06, 2024 10:17 PM
புதுடில்லி:“அரசியல் சதியால், பொய் சாட்சி அடிப்படையில் என் கணவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்,” என, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கூறினார்.டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள 'வீடியோ'வில் கூறியிருப்பதாவது:திட்டமிட்ட அரசியல் சதிக்கு என் கணவர் பலியாக்கப்பட்டுள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி., மகுண்டா ஸ்ரீனிவாசுலு ரெட்டி அளித்துள்ள பொய்யான வாக்குமூலத்தின் அடிப்படையில், டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை என் கணவரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. அந்தக் கட்சி மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.என் கணவர் அரவிந்த் கெஜ்ரிவால் மிகவும் நேர்மையானவர். தேசப்பற்று மிக்கவர். அதனால்தான் டில்லி மக்கள் அவரை மூன்றாவது முறையாகவும் முதல்வர் ஆக்கியுள்ளனர். மகுண்டா ஸ்ரீனிவாசுலு ரெட்டியின் மகன் ராகவ மகுண்டா ரெட்டி கைது செய்யப்பட்டு ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில்தான் தன் மகனைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஸ்ரீனிவாசுலு பொய்யான வாக்குமூலத்தை அமலாக்கத் துறைக்கு அளித்தார்.டில்லியில் ஒரு அறக்கட்டளை நிலம் தொடர்பாக 2021ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்தித்ததாக ஸ்ரீனிவாசுலு ரெட்டி கூறியிருந்தார். ஆனால், அவருடைய மகன் கைது செய்யப்பட்டவுடன் 2023ம் ஆண்டு ஜூலை 17ல் அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் டில்லி முதல்வருக்கு எதிராக பொய்யான வாக்குமூலத்தை அளித்தார்.அந்த வாக்குமூலத்தில் டில்லியில் மதுபான விற்பனை செய்ய அனுமதி வேண்டுமென்றால் ஆம் ஆத்மி கட்சிக்கு 100 கோடி ரூபாய் கெஜ்ரிவால் கேட்டதாக கூறியுள்ளார். அப்போது 10 பேர் அங்கு இருந்ததாகவும் கூறியுள்ளார். இத்தனை பேர் முன்னிலையில் யாராவது லஞ்சம் கேட்பார்களா?ஸ்ரீனிவாசுலு ரெட்டி பொய் வாக்குமூலம் அளித்தவுடன் அவரது மகனுக்கு ஜாமின் கிடைத்து விட்டது. .அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., ஆகிய விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி என் கணவரையும், ஆம் ஆத்மி கட்சியையும் முடக்க பிரதமர் நரேந்திர மோடி சதி செய்து வருகிறார். என் இந்த வீடியோவை டில்லி மக்கள் ஒவ்வொருவருக்கும் சென்று சேருமாறு பகிர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.டில்லி அரசின் 2021 - 2022ம் ஆண்டின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., ஆகியவை, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து திஹார் சிறையில் அடைத்துள்ளது.
கெஜ்ரிவால் மனு நிராகரிப்பு
சிறையில் டாக்டர்கள் தன்னை பரிசோதனை செய்யும்போது, மனைவி சுனிதாவை தன் தனது உதவியாளராக அனுமதிக்க சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா பிறப்பித்த உத்தரவு:கெஜ்ரிவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. சிறை விதிமுறைப்படி, விசாரணைக் கைதிக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் உடல்நிலை குறித்து, டாக்டர்களுடன் குடும்ப உறுப்பினர் ஆலோசனை நடத்தலாம். கெஜ்ரிவாலுக்கு ஏற்பட்டுள்ள அதே குறைபாட்டுகளுடன் மேலும் பல கைதிகளும் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களுக்கு எல்லாம் உதவியாளரை வைத்-துக் கொள்ள அனுமதி அளிக்கவில்லை. கெஜ்ரிவாலுக்கு மட்டும் சிறப்பு அனுமதி அளிக்க சட்டத்தில் இடமில்லை. கெஜ்ரிவாலின் மருத்துவப் பதிவேடுகளை அவரது மனைவி பார்வையிட ஆட்சேபனை இல்லை. மேலும், எய்ம்ஸ் டாக்டர்கள் பரிந்துரைத்த உணவுகள் கெஜ்ரிவாலுக்கு அவரது வீட்டில் இருந்தே சமைத்து வழங்கி வருகின்றனர். அந்த உணவைத் தயாரிக்கும் முறை குறித்து கெஜ்ரிவால் மனைவி டாக்டர்களுடன் ஆலோசிக்கவும் தடை இல்லை.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.