உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் ரூ.650 கோடி குடிநீர் கட்டணம் பாக்கி

தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் ரூ.650 கோடி குடிநீர் கட்டணம் பாக்கி

பெங்களூரு: தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள், 640 கோடி ரூபாய் குடிநீர் கட்டணம் பாக்கி வைத்துள்ளன. இதனால் புதிய திட்டங்களை செயல்படுத்த பணம் இல்லாமல், பெங்களூரு குடிநீர் வாரியம் திணறுகிறது.லட்சக்கணக்கான வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் உட்பட அரசு நிறுவனங்களும் காவிரி குடிநீர் இணைப்பு பெற்றுள்ளன. பெங்களூரு குடிநீர் வாரியத்துக்கு, கட்டணமாக மாதந்தோறும் 130 கோடி முதல் 150 கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வேண்டும். ஆனால் கோடிக்கணக்கான ரூபாய் கட்டணம் பாக்கி வைக்கப்பட்டுள்ளது.அரசின் மற்ற கார்ப்பரேஷன், வாரியங்களுக்கு, பல வழிகளில் வருவாய் கிடைக்கிறது. ஆனால் பெங்களூரு குடிநீர் வாரியத்துக்கு, குடிநீர் கட்டணத்தை தவிர, வேறு எந்த வருவாயும் இல்லை.பொதுமக்களிடம் வசூலிக்கும் குடிநீர் கட்டண வருவாயில் இருந்து, அன்றாட நிர்வகிப்பு, குழாய்கள் சீரமைப்பு, புதிதாக இணைப்பு ஏற்படுத்துவது உட்பட மற்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.குறிப்பாக மின் கட்டணத்துக்கே, தன் வருவாயில் பெரும்பகுதியை குடிநீர் வாரியம் செலவிடுகிறது.

நெருக்கடி

கடந்த எட்டு ஆண்டுகளாக, குடிநீர் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயர்த்தும் அரசு, குடிநீர் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளிக்க மறுக்கிறது. எனவே புதிய திட்டங்களை செயல்படுத்த முடியாமல், குடிநீர் வாரியம் திணறுகிறது.இதற்கிடையே தனியார் மட்டுமின்றி, அரசு சார்ந்த நிறுவனங்களும் கூட, கோடிக்கணக்கான ரூபாய் குடிநீர் கட்டணம் பாக்கி வைத்துள்ளன. இது குடிநீர் வாரியத்தின் பொருளாதார நெருக்கடியை அதிகரித்துள்ளது.குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைக்கும், குடிநீர் கட்டணத்தை நம்பி குடிநீர் வாரியம் செயல்படுகிறது. குடிநீர் கட்டணத்தை உயர்த்த அரசு அனுமதியளிக்கவில்லை. வருவாய்க்கு மாற்று வழியை தேடுகிறோம். வருவாய் கிடைக்காமல் புதிய இணைப்பு ஏற்படுத்துவது கஷ்டம்.செல்வாக்கு நபர்களே குடிநீர் கட்டணம் பாக்கி வைத்துள்ளனர். குடிநீர் வாரியத்துக்கு, 650 கோடி ரூபாய் வர வேண்டியுள்ளது. இவர்களிடம் கட்டண பாக்கியை வசூலிப்பது, பெரும் பிரச்னையாக உள்ளது.

துண்டிக்காதது ஏன்?

இந்திரா உணவகங்கள், அரசு மருத்துவமனைகள், ராணுவத்துறை நிறுவனங்கள் உட்பட மத்திய, மாநில அரசுகள் குடிநீர் கட்டணம் பாக்கி வைத்துள்ளன. கட்டணத்தை செலுத்தும்படி, பல முறை நோட்டீஸ் அனுப்பியும் பலன் இல்லை. அரசு நிறுவனங்களின் குடிநீர் இணைப்பை துண்டித்தால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், குடிநீர் இணைப்பை நாங்கள் துண்டிக்கவில்லை.குடிநீர் கட்டண பாக்கியை வசூலிப்பது குறித்து, அரசுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளோம். கட்டணம் செலுத்தும்படி விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை