ராகுல் நாக்கை அறுப்பவருக்கு பரிசு: சிவசேனா எம்.எல்.ஏ., சிவசேனா எம்.எல்.ஏ., சஞ்சய் சர்ச்சை பேச்சு
மும்பை, “இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசிய ராகுலின் நாக்கை அறுப்பவருக்கு, 11 லட்சம் ரூபாய் வழங்குவேன்,” என, சிவசேனா எம்.எல்.ஏ., சஞ்சய் கெய்க்வாட் கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்காவுக்கு சமீபத்தில் சென்ற காங்., மூத்த தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல், இட ஒதுக்கீடு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். இதற்கு, பா.ஜ.,வினர் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின், 'நான் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவன் அல்ல' என ராகுல் விளக்கம் அளித்தார்.இந்நிலையில், மஹாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் உள்ள புல்தானா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வும், ஆளுங்கட்சியான முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவைச் சேர்ந்தவருமான சஞ்சய் கெய்க்வாட் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:அமெரிக்காவில் இருந்த போது, நம் நாட்டில் இடஒதுக்கீடு முறையை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாக ராகுல் பேசியுள்ளார். இது, காங்கிரசின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி உள்ளது. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசிய ராகுலின் நாக்கை அறுப்பவருக்கு, 11 லட்சம் ரூபாய் வழங்குவேன். இவ்வாறு அவர் கூறினார்.சஞ்சய் கெய்க்வாட்டின் இந்த பேச்சுக்கு, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த கருத்தில் தங்களுக்கு உடன்பாடில்லை என, பா.ஜ., நிர்வாகிகள் கூறினர். சர்ச்சைக்குரிய வகையில் சஞ்சய் கெய்க்வாட் பேசுவது இது முதன்முறையல்ல.அருவருக்கத்தக்க வகையில் சஞ்சய் கெய்க்வாட் கருத்து தெரிவித்துள்ளார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பேச்சுக்கு, வரும் சட்டசபை தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பர்.விஜய் வடேட்டிவார்,மஹாராஷ்டிரா எதிர்க்கட்சி தலைவர், காங்.,