| ADDED : மார் 24, 2024 12:39 AM
புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோர் சமீபத்தில் பேட்டி அளித்தனர். அப்போது, கட்சியின் வங்கிக் கணக்குகளை, வருமான வரித் துறை முடக்கியுள்ளது குறித்து குற்றஞ்சாட்டினர்.இதற்கு பதிலளித்து, பா.ஜ.,வின் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா நேற்று கூறியுள்ளதாவது:காங்கிரஸ் கட்சிக்கு பல வங்கிகளில் பல கணக்குகள் உள்ளன. அக்கட்சி, பல்வேறு 'பான்' எண்களை கொடுத்து, வங்கிக் கணக்குகளை துவக்கியுள்ளதாகவும், அவற்றில், 1,000 கோடி ரூபாய் உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.தங்கள் கட்சியின் விதிகளுக்கு புறம்பாக இவ்வாறு பல பெயர்களில் அவர்கள் கணக்கு துவக்கியுள்ளனர். இதைத் தவிர, 500 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும் அந்த கட்சிக்கு உள்ளன.வருமான வரி செலுத்தாததால், காங்கிரசின் மூன்று அல்லது நான்கு கணக்குகளை வருமான வரித் துறை நிறுத்தி வைத்துள்ளது; முடக்கி வைக்கவில்லை. வரிக்கு ஈடாக, அந்தக் கணக்குகளில் இருந்து, 135 கோடி ரூபாயை மட்டும் பயன்படுத்த முடியாது; மற்றவற்றை பயன்படுத்த முடியும்.ஆனால், தேர்தலுக்காக பொய் பிரசாரத்தில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. ரயில் டிக்கெட் வாங்குவதற்கு கூட கட்சியிடம் பணமில்லை என்று ராகுல் கூறியுள்ளார். அதனால் தான், அவர் தனி விமானத்தில் பயணம் செய்கிறாரா? வரும் தேர்தலில் மிகப் பெரும் தோல்வியை காங்கிரஸ் சந்திப்பது நிச்சயமாகிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.