பெங்களூரு :சொத்து குவிப்பு வழக்கில், துணை முதல்வர் சிவகுமாருக்கு எதிராக, சி.பி.ஐ., மற்றும் பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் தாக்கல் செய்த மனுக்களை, கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.கர்நாடகாவில், 2013 - 2018 வரை காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அப்போது, நீர்ப்பாசன துறை அமைச்சராக இருந்த சிவகுமார், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.அவர் ஹவாலா பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்ததால், அமலாக்க துறை விசாரணை நடத்தியது. சிவகுமாரை கைது செய்து, திஹார் சிறையில் அடைத்தனர். பின், ஜாமினில் வந்தார்.இதையடுத்து, மாநிலத்தில் அமைந்த பா.ஜ., அரசு, சிவகுமார் மீதான சொத்து குவிப்பு வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைத்தது. சி.பி.ஐ.,யும் விசாரணை நடத்தி வந்தது. கடந்த ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், சிவகுமார் மீது சி.பி.ஐ., விசாரணைக்கு அளித்த அனுமதியை மாநில அரசு திரும்ப பெற்றது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சி.பி.ஐ., தரப்பும், விஜயபுரா பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னாலும், உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே மனு தாக்கல் செய்தனர்.விசாரணை முடிந்து, நீதிபதிகள் சோமசேகர், உமேஷ் அடிகா அமர்வு நேற்று அளித்த தீர்ப்பு:மாநில அரசுக்கும், சி.பி.ஐ.,க்கும் இடையே பிரச்னை இருப்பதை வாதங்கள் மூலம் அறிந்து கொண்டுள்ளோம். சி.பி.ஐ., மத்திய அரசின் கீழ் செயல்படுகிறது. டில்லி சிறப்பு போலீஸ் சட்டம் மற்றும் பண பரிமாற்றம் சட்டம் குறித்து மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே இருக்கும் அதிகார வரம்பு குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இங்கு விவாதிக்கப்பட்ட சட்ட விஷயங்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தொடர்புடையதால், அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 131ன் படி, உச்ச நீதிமன்றம் முடிவு செய்வது சரியானதாக இருக்கும்.எனவே, இந்த மனுக்கள் மீது உயர் நீதிமன்றம் முடிவு செய்வது சரியாக இருக்காது என்பதால், மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவர்கள், உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு தீர்வு காணலாம்.இவ்வாறு தீர்ப்பளித்தனர்.இதன் வாயிலாக, சிவகுமாருக்கு தற்காலிக நிம்மதி கிடைத்துள்ளது. தற்போது இவர், கர்நாடக துணை முதல்வராக உள்ளார்.