| ADDED : மே 12, 2024 12:19 AM
அமராவதி, ஆந்திராவில் சுங்கச்சாவடி அருகே விபத்துக்குள்ளான காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7 கோடி ரூபாயை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு லோக்சபா மற்றும் சட்டசபைக்கு ஒரே கட்டமாக நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் நல்லாஜெர்லா கிராமத்தின் அருகே உள்ள வீரவள்ளி சுங்கச்சாவடி அருகே நேற்று காலை வேகமாக வந்த கார், அங்கு நின்றிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காரில் படுகாயங்களுடன் சிக்கி தவித்த டிரைவர் வீரபத்ர ராவை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.விபத்துக்குள்ளான காரை போலீசார் சோதனையிட்ட போது, ஏழு பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். அவற்றை திறந்து பார்த்தபோது, ஒவ்வொரு பெட்டியிலும் தலா 1 கோடி ரூபாய் இருந்தது. கணக்கில் வராத அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட தொகை, யாருடையது, எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.