| ADDED : மே 26, 2024 12:56 AM
அய்ஸ்வால், மியான்மரில் இருந்து கடத்தி வரப்பட்டு மிசோரமில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8.43 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயினை போலீசார் பறிமுதல் செய்தனர்.நம் அண்டை நாடான மியான்மரில் இருந்து வடகிழக்கு மாநிலமான மிசோரமின் சம்பாய் மாவட்டத்துக்கு ஹெராயின் கடத்தி வரப்பட்டுள்ளதாக துணை ராணுவ படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மிசோரம் போலீசாருடன் இணைந்து துணை ராணுவப்படையினர் நேற்று முன்தினம் இரவு அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது அப்பகுதியில் உள்ள நகூர் கிராமத்தில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த காரில் சோதனை நடத்தியதில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8.43 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதை பொருளை அவர்கள் பறிமுதல் செய்தனர்.மிசோரம் மாநிலத்தின் சம்பாய் உள்ளிட்ட ஆறு மாவட்டங்கள் மியான்மருடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ள நிலையில், அங்கிருந்து கடத்தி வரப்பட்ட போதை பொருள் காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும், இவற்றை வெளிமாநிலங்களுக்கு சப்ளை செய்ய திட்டமிட்டிருந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. எனினும், ஹெராயின் கடத்தல் தொடர்பாக யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.