| ADDED : ஜூன் 30, 2024 10:30 PM
பெங்களூரு : அரசு பஸ்களில் பயணம் செய்யும் பெண் பயணியர், டிக்கெட்டை தொலைத்தால் 10 ரூபாய் அபராதம் விதிக்க, கே.எஸ்.ஆர்.டி.சி., முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.கர்நாடகாவில் சக்தி திட்டம் என்ற பெயரில், அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் அமலில் உள்ளது. ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் பெண்கள், எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறி, கண்டக்டரிடம் ஜீரோ டிக்கெட் வாங்கி கொள்ள வேண்டும்.பணம் கொடுத்து டிக்கெட் எடுத்தபோது, டிக்கெட்டை பத்திரமாக வைத்திருந்த பெண்கள், இப்போது இலவச பயணம் செய்வதால், டிக்கெட்டை தொலைப்பதாக சொல்லப்படுகிறது. பஸ்சில் டிக்கெட் பரிசோதகர் சோதனை செய்யும் போது, பெண் பயணியர் டிக்கெட்டை தவறவிட்டால், கண்டக்டருக்கு தான் டோஸ் விழுகிறது.இந்நிலையில் டிக்கெட்டை தொலைக்கும் பெண் பயணியரிடம் அபராதம் வசூலிக்க, கே.எஸ்.ஆர்.டி.சி., முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.தற்போது டிக்கெட் இயந்திரம் மூலம் டிக்கெட் கொடுக்கப்படுகிறது. ஒருவேளை டிக்கெட் இயந்திரம் பழுதானால், பெண் பயணியருக்கு பிங்க் நிற டிக்கெட்டை கண்டக்டர் கொடுப்பார்.அந்த டிக்கெட்டை தொலைத்தால், 10 ரூபாய் அபராதம் விதிக்க அனுமதி கேட்டு அரசிடம், கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகம் பரிந்துரை செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.