கான்பூர்: உத்தர பிரதேசத்தின் கான்பூர் அருகே, சபர்மதி எக்ஸ்பிரஸ் பயணியர் ரயிலின், 20 பெட்டிகள் தடம் புரண்டன. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உ.பி.,யின் வாரணாசியில் இருந்து, குஜராத்தின் ஆமதாபாதுக்கு, சபர்மதி எக்ஸ்பிரஸ் பயணியர் ரயில் நேற்று புறப்பட்டது. அதிகாலை 2:35 மணி அளவில், கான்பூர் - பீம்சென் ரயில் நிலையம் இடையே வந்த போது, ரயில் தடம் புரண்டது. இதில், ரயிலின் 20 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த சம்பவம் நடந்த போது, ரயிலில் பயணியர் துாங்கிக் கொண்டிருந்தனர். அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் பயணியர் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவலறிந்த மீட்புப் படையினர், பயணியரை பாதுகாப்பாக மீட்டனர்.இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு மர்ம பொருளின் மீது, ரயில் இன்ஜின் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துஉள்ளது. இதில், மர்ம நபர்கள் அல்லது சமூக விரோதிகளின் தொடர்பு குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. தண்டவாளத்தில் இருந்த பாறாங்கற்கள் மீது ரயில் இன்ஜின் மோதியதாக ரயில் டிரைவர் தெரிவித்துள்ளார். இது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விபத்து காரணமாக ஏழு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன; மூன்று ரயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.இவ்வாறு அவர்கள் கூறினர்.
விபத்துக்கு காரணம் என்ன?
சபர்மதி எக்ஸ்பிரஸ் பயணியர் ரயில் விபத்து குறித்து, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமூக வலைதளத்தில் நேற்று கூறியதாவது:நேற்று அதிகாலை கான்பூர் அருகே தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு பொருளின் மீது ரயில் மோதி தடம் புரண்டது. நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து நடந்த இடத்தில் இருந்து ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இது குறித்து, உ.பி., போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.