உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / * டில்லி, பஞ்சாப், ஹரியானாவில் பாதுகாப்பு... உச்சகட்டம்* பஹல்காம் தாக்குதலால் கண்காணிப்பு தீவிரம்

* டில்லி, பஞ்சாப், ஹரியானாவில் பாதுகாப்பு... உச்சகட்டம்* பஹல்காம் தாக்குதலால் கண்காணிப்பு தீவிரம்

புதுடில்லி:ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்ததை அடுத்து, தலைநகர் டில்லி, அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் மாவட்டம் பைசரன் பள்ளத்தாக்கில் நேற்று முன் தினம் மாலை 3:00 மணிக்கு, ராணுவ சீருடையில் வந்த பயங்கரவாதிகள், சுற்றுலா பயணியர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தலைநகர் டில்லி, அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் தூதரகம் உட்பட முக்கிய இடங்களில் போலீஸ், துணை ராணுவம் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.சுற்றுலாப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எல்லைகளில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.செங்கோட்டை, இந்தியா கேட், குதுப் மினார், ஹுமாயூன் கல்லறை, பங்களா சாஹிப் குருத்வாரா, தாமரை கோவில், அக்ஷர்தாம் சுவாமி நாராயணன் கோவில், லோதி தோட்டம், ஜும்மா மசூதி, டில்லி ஹாத் ஐ.என்.ஏ., தேசிய அருங்காட்சியகம், ஜந்தர் மந்தர், ஹஸ்ரத் நிஜாமுதீன் ஆலியா தர்கா, ராஜ்காட் மற்றும் சப்தர்ஜங் கல்லறை உள்ளிட்ட சுற்றுலா பயணியர் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு இரு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்த இடங்களில் போலீஸ், துணை ராணுவம் மற்றும் ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்தி ரோந்து சுற்றி வருகின்றனர்.அதேபோல மெட்ரோ ரயில் நிலையங்கள், பஸ் ஸ்டாண்டுகள், ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், மற்றும் மார்க்கெட்டுகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.சாந்தினி சவுக், சதர் பஜார், லஜ்பத் நகர், சரோஜினி நகர் மற்றும் ரஜோரி கார்டன் போன்ற தலைநகர் டில்லியின் முக்கிய மார்க்கெட்டுகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.மெட்ரோ ரயில் நிலையங்களுக்குள் டில்லி மாநகரப் போலீசின் சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. சந்தேகத்துக்குரிய நபரோ, பொருட்களோ தென்பட்டால், உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என, பொதுமக்களுக்கு பாதுகாப்புப் படையினர் அறிவுறுத்தியுள்ளனர்.உத்தர பிரதேசம் மற்றும் ஹரியானா எல்லைகளில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை, போலீஸ் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.ஏற்கனவே, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வந்திருப்பதை முன்னிட்டு, தலைநகர் டில்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது. தற்போது, ஜம்மு - காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.மாநகர் முழுதும் பல இடங்களில் தடுப்புகள் அமைத்து, உலோகம் மற்றும் வெடிமருந்துகளை கண்டறியும் சோதனைக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மேலும், டில்லி முழுதும் ஏராளமான போலீசார் சாதாரண உடையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்சாப்

அண்டை நாடான பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பஞ்சாப் மாநிலத்திலும், உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, போலீஸ் உட்பட பல துறைகளின் உயர் அதிகாரிகளுடன், முதல்வர் பகவந்த் மான் நேற்று ஆலோசனை நடத்தினார்.கூட்டத்துக்குப் பின், நிருபர்களிடம் பகவந்த் மான் கூறியதாவது:பஞ்சாப் மாநிலத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது நம் கடமை. பயங்கரவாதத்துக்கு எந்த மதமும் கிடையாது. அப்பாவி மக்களைக் கொல்ல எந்த மதம் வழிகாட்டுகிறது? எந்த மதம் காட்டுமிராண்டித்தனத்தை அனுமதிக்கிறது? ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் ஹோட்டல்களில் சிக்கித் தவிக்கும், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியரை பாதுகாப்பாக அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு - -காஷ்மீர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ் கூறியதாவது:ஜம்மு - -காஷ்மீரின் பஹல்காம் பயங்கர தாக்குதல் சம்பவ குறித்து தகவல் வந்தவுடனேயே, மாநிலம் முழுதும் பாதுகாப்பை அதிகரிக்க முதல்வர் பகவந்த் மான் உத்தரவிட்டார்.ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பஞ்சாபில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கின்றனர். அங்கு, போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல, மாநிலம் முழுதும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ள முக்கியப் பிரமுகர்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.மத தலங்கள், அரசியல் கட்சி அலுவலகங்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.உளவுத்துறை மற்றும் எல்லை பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இந்தத் தாக்குதல் வாயிலாக, பாகிஸ்தான் ஒரு மறைமுகப் போர் துவக்கியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளின் பல சதித்திட்டங்களை, பஞ்சாப் போலீஸ் முறியடித்துள்ளது.ஜம்மு - -காஷ்மீர் எல்லையில் அமைந்துள்ள பதான்கோட் பகுதியில், ராணுவம் மட்டுமின்றி, மாநில போலீசாரும் இணைந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் எல்லைகளில் கண்காணித்து வருகின்றனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானுடன் 553 கி.மீ., தூரத்தை பஞ்சாப் மாநிலம் பகிர்ந்து கொள்கிறது.எல்லைப் பகுதிகளில் 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் வாயிலாக வெடிமருந்து, துப்பாக்கி மற்றும் போதைப் பொருட்களை அனுப்பி வருகின்றனர். பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் நடத்தும் இந்தச் செயலை ஏராளாமான முறை நாம் முறியடித்துள்ளோம்.அதிகளவில் சுற்றுலாப் பயணியர் வரும் அமிர்தசரஸ் உட்பட பல இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

ஹரியானா

ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி கூறியதாவது:ஜம்மு- - காஷ்மீரின் பஹல்காமில், அப்பாவி சுற்றுலாப் பயணியர் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலுக்கு காரணமானவர்கள் தப்பிக்க முடியாது. பயங்கரவாதிகள் விரைவில் மத்திய அரசால் தண்டிக்கப்படுவர். பயங்கரவாதத்துக்கு எதிராக மத்திய அரசு மன உறுதியுடன் போராடி வருகிறது.இந்தத் தாக்குதலில், ஹரியானாவின் கர்னால் நகரைச் சேர்ந்த, நம் கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வால்,26 கொல்லப்பட்டுள்ளார். விடுமுறையில் வந்த அவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. மனைவியுடன் பஹல்காம் சுற்றுலா சென்றவர், பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளார். நர்வால் குடும்பத்தினருடன் 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக பேசி ஆறுதல் கூறினேன். நர்வாலின் தாத்தா, 'என் பேரனை இழந்து விட்டேன். இதேபோல நாளை அது வேறு யாராகவும் இருக்கலாம். பிரதமர் மோடியிடம் கூறி பயங்கரவாதிகளை ஒழிக்க வேண்டும்'என, கேட்டுக் கொண்டார்.இவ்வாறு அவர் கூறினார்.ஹரியானா சட்டசபை சபாநாயகர் ஹர்விந்தர் கல்யாண், கர்னால் நகரில் வினய் நர்வால் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

'பயங்கரவாதத்தை வேரறுப்போம்'

வட அமெரிக்க பஞ்சாபி சங்க நிர்வாக இயக்குனர் சத்னம் சிங் சாஹல் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதல் கோழைத்தனமான வன்முறைச் செயல். இது, அப்பாவி உயிர்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல, நம் நாட்டின் அமைதி, ஒற்றுமை மற்றும் மனிதநேயக் கொள்கைகளின் மீதான தாக்குதல். கற்பனை கூட செய்ய முடியாத வலியை எதிர்கொண்டுள்ள துயரமடைந்த குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல். காயம் அடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். ஜம்மு - -காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக வட அமெரிக்க பஞ்சாபி சங்கம் எப்போதும் உடனிருக்கும். இந்த நேரத்தில், பயங்கரவாதத்தை வேரறுப்பதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்த அனைத்து நாடுகளும் தீவிரப்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகாரி உடலுக்கு அஞ்சலி

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த, ஹரியானாவைச் சேர்ந்த, நம் கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வால் உடல், டில்லி சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று பிற்பகலில் வந்து சேர்ந்தது.முதல்வர் ரேகா குப்தா மற்றும் அமைச்சர்கள், நர்வால் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது மனைவிக்கு ஆறுதல் கூறினர். சமூக வலைத்தளத்தில், முதல்வர் ரேகா குப்தா வெளியிட்டுள்ள பதிவு:ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணியரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றது மிகுந்த வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. பயங்கரவாதிகளின் கோழைத்தனமான செயலுக்கு தகுந்த பாடத்தை நம் நாடு கற்பிக்கும்.இந்தத் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு மன வலிமையை அளிக்கவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணம் அடையவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்தேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை