கள்ளில் கலப்படம் செய்ய பதுக்கிய 4,950 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
கேரள மாநிலத்தில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கலால் துறையினர் சிறப்பு சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம், பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு சிக்கணாம்பாறை பகுதியில், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்தி வந்த, 1,650 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக, கைது செய்த மூவரிடம் நடத்திய விசாரணையில், தமிழகம் -- கேரளா எல்லையில், எரிசாராயம் பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. நேற்று முன்தினம் இரவு, தமிழக எல்லையில், ஆனைமலை அருகே, செம்மணாம்பதியில் உள்ள தென்னந்தோப்பில் சோதனை நடத்தினர்.தென்னந்தோப்பில், மூன்று இடங்களில் குழி தோண்டி பதுக்கி வைத்திருந்த, 150 கேன்களில் இருந்து, 4,950 லிட்டர் எரிசாராயத்தைக் கண்டுபிடித்தனர். தென்னந்தோப்பு, தமிழகத்துக்கு உட்பட்ட பகுதியில் இருந்ததால், பறிமுதல் செய்த எரிசாராயத்தை, ஆனைமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.இதுகுறித்து, கேரள கலால் துறை இன்ஸ்பெக்டர் சுரேஷ் கூறும்போது, ''கேரள மாநிலத்தில், தென்னங்கள்ளில் போதைத் தன்மையை அதிகரிக்க, எரிசாராயம் கலப்படம் செய்கின்றனர்,'' என்றார்.எரிசாராயம் பதுக்கி வைத்திருந்து, தப்பியோடிய நபர் குறித்து, ஆனைமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேடப்பட்டவர் மர்ம மரணம்
கேரள கலால் துறையினர், செம்மணாம்பதியில், தென்னந்தோப்பில் எரிசாராயம் பதுக்கிய, கேரள மாநிலம் பெரும்பாவூர் ஒக்கல் பகுதியைச் சேர்ந்த சபீஷ் ஜேக்கப், 41, என்பவரை தேடி வந்தனர். நேற்று காலை செம்மணாம்பதி தோப்பில், விஷம் குடித்து, மயங்கிய நிலையில் கிடந்த அவரை, அப்பகுதியினர் மீட்டு, பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கொல்லங்கோடு போலீசார் விசாரிக்கின்றனர். -- நிருபர் குழு -