பெங்களூரு : குமாரசாமி, மத்திய அரசில் முக்கிய பொறுப்பில் உள்ளதால், கர்நாடக ம.ஜ.த., தலைவர் பொறுப்பை ஏற்க, மாநில இளைஞர் பிரிவு தலைவர் நிகில் தயாராகிறார்.கர்நாடக ம.ஜ.த., தலைவராக இருந்த இப்ராகிமுக்கு, லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன், ம.ஜ.த., கூட்டணி வைத்ததில் விருப்பம் இல்லை. பகிரங்கமாகவே எதிர்ப்புத் தெரிவித்தார். தலைவர்களை விமர்சித்தார். இதற்கு பணியாத ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா, இப்ராகிமை மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நீக்கி, குமாரசாமியிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.மாண்டியா லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற குமாரசாமி, தற்போது பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில், மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளார். இவரால் கட்சிப் பொறுப்பையும் கவனிப்பது கஷ்டம். எனவே மாநிலத் தலைவர் பதவியை, ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். இந்த பதவியில் நிகில் குமாரசாமி அமர்வார் என, எதிர்பார்க்கப்படுகிறது.மாநிலத் தலைவர் பதவியை, குடும்பத்தினருக்கு அளிக்கப்படுவதாக அவப்பெயர் ஏற்படும் என, கருதி தலைமை பொறுப்பை நிகில் ஏற்க தயங்கினால், வேறொருவர் தலைவராகலாம். நிகிலுக்கு செயல் தலைவர் அல்லது பொதுச் செயலர் பதவி அளிக்க, கட்சி மேலிடம் தீவிரமாக ஆலோசிக்கிறது.தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணாவின் குடும்பமே சர்ச்சையில் சிக்கி ஒருவர் பின் ஒருவராக சிறைக்கு செல்கின்றனர். பலாத்கார வழக்கில், சகோதரர்கள் பிரஜ்வல் ரேவண்ணா, சூரஜ் ரேவண்ணா கைதாகி சிறையில் உள்ளனர். ரேவண்ணாவும், அவரது மனைவி பவானியும், பணிப்பெண் கடத்தல் வழக்கில் சிக்கி, தற்போது ஜாமினில் உள்ளனர். ரேவண்ணா மீண்டும் பழைய செல்வாக்கை பெறுவது சந்தேகம்.இதை உணர்ந்துள்ள தேவகவுடா, கட்சியை வழிநடத்தும் பொறுப்பை பேரன் நிகில் குமாரசாமியிடம் ஒப்படைக்க விரும்புகிறார். குமாரசாமியும் மகனை கட்சிப் பணிகளில் அதிகம் ஈடுபடுத்தினார். அனைத்து கூட்டம், நிகழ்ச்சிகளுக்கு மகனை உடன் அழைத்துச் சென்றார். லோக்சபா தேர்தலின்போது, தந்தைக்கு பதிலாக, தானே முன் நின்று தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.தேர்தல் முடிந்த பின்னும், கட்சியின் முக்கியமான முடிவுகளை, நிகில் எடுக்கிறார். இவரை மாநிலத் தலைவராக்கும்படி, தலைவர்கள், தொண்டர்கள் நெருக்கடி கொடுக்கின்றனர். இவர் தலைமை பொறுப்பேற்க வாய்ப்புள்ளது.