சூரத்,குஜராத்தில் விநாயகர் சிலையை கல்வீசி சேதப்படுத்திய நபர்களை போலீசார் கைது செய்த நிலையில், அவர்களை விடுவிக்கக்கோரி, போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.குஜராத் மாநிலம் சூரத் லால்கேட் பகுதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பந்தல் அமைத்து விநாயகர் சிலை வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு ஆட்டோவில் வந்த மர்ம கும்பல், அந்த பந்தல் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி தப்பியது. இதில், விநாயகர் சிலை சேதமடைந்தது.சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கல்வீசிய நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.இதில், சிறுவர்களையும் அழைத்துச் சென்றதால், அவர்களின் உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அப்போது, எதிர்தரப்பினரும் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு, அவர்களை சிறையில் அடைக்கும்படி கோஷங்கள் எழுப்பினர். இதனால், இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதுடன், ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், சில போலீசாரும் காயமடைந்தனர்; அங்கு நிறுத்தப்பட்ட போலீஸ் வாகனங்களும் சேதமடைந்தன.இந்த மோதலை தடுக்கும் நோக்கில் போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, முதற்கட்டமாக 32 பேரை கைது செய்தனர்.இதுதவிர, அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, மோதலில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மோதல் நிகழ்ந்த பகுதியில் மேலும் கலவரம் நிகழாமல் இருக்க, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இதற்கிடையே, சம்பவ இடத்தில் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி, போலீஸ் உயரதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பத்திரிகையாளர்களிடம் அவர் கூறுகையில், “நகரின் அமைதியை சீர்குலைத்த ஒவ்வொரு நபரும் கைது செய்யப்படுவார்; போலீசாரின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது,” என்றார்.