பெங்களூரு: பெங்களூரின் பல பகுதிகளில் நேற்று மாலை திடீரென மழை பெய்ததால், வெயிலின் தாக்கத்தில் இருந்து மீண்டு, சற்று குளிர்ச்சி நிலவியது. மழை காலம் துவங்குவதற்கு முன், மழை நீர் கால்வாய்கள் துார்வாரும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.பெங்களூரில் கடந்தாண்டு பருவமழை சரியாக பெய்யவில்லை. இந்தாண்டு இரண்டு மாதங்களாக வெயில் சுட்டெரிக்கிறது. வெப்பத்தை தாங்க முடியாமல் பொது மக்கள் அவதிப்படுகின்றனர்.அனல் காற்றும் வீசுவதால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். மக்கள் வெளியே நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, மழை பெய்யாதோ என்று பெங்களூரு மக்கள் ஏக்கத்துடன் இருந்தனர். இதற்கிடையில், நேற்று மாலை திடீரென லேசான மழை பெய்தது. நகரின் ஹெச்.பி.ஆர்.லே அவுட், ஜெயநகர், பொம்மனஹள்ளி, இந்திராநகர், சிவாஜிநகர், ஹெப்பால், பசவனகுடி, சாம்ராஜ்பேட், வில்சன் கார்டன் உட்பட நகரின் பல பகுதிகளில் மழை பெய்தது.இடியுடன் கூடிய, பலத்த காற்றும் வீசியது. இந்த மழையை மக்கள் மிகவும் ரசித்தனர். குளிர் காற்றும் வீசியது.மழையில் நனைந்தபடியே பலரும் இரு சக்கர வாகனங்களை ஓட்டியதை காண முடிந்தது. வந்த வேகத்திலேயே மழை மாயமானது. இனி பெய்யாதோ என்று மீண்டும் காத்திருக்கின்றனர்.விஜயநகரில் ஒரு மரம், மின்கம்பம் ஸ்கூட்டர் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அங்கு யாரும் இல்லாததால், அசம்பாவித சம்பவம் நடக்கவில்லை.இதற்கிடையில், மழை காலத்துக்கு தயாராகும் வகையில், பெங்களூரு நகரில் உள்ள மழை நீர் கால்வாய்களை துார்வாரும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக, கோரமங்களா - செல்லகட்டா பள்ளத்தாக்கில் கலக்கும் மழை நீர் கால்வாய்களை துார்வாரும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மாநகராட்சியின் குடிநீர் வடிகால் வாரிய பிரிவு தலைமை பொறியாளர் பிரஹலாத் கூறியதாவது:மழை காலம் துவங்குவதற்கு முன்னரே, நகரின் அனைத்து மழை நீர் கால்வாய்களை துார்வாரும் படி, மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார்கிரிநாத் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, துார்வாரும் பணிகள் துரிதமாக செய்து வருகிறோம். குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு, மழை நீர் தடையின்றி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுவரை 1,000 டன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.