தாய், தந்தையில் துவங்கி, ஈ.வெ.ரா, அண்ணாதுரை, கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், எ.வ.வேலு என எவரையும் விட்டு வைக்காமல் விதவிதமான வாழ்க கோஷங்களை எழுப்பி தமிழக எம்.பி.,க்கள் உறுதிமொழி வாசித்து பதவி ஏற்றுக் கொண்டனர்.-லோக்சபாவில் எம்.பி.,க்களின் பதவியேற்பு உறுதிமொழி வாசிக்கும் அலுவல்கள் நேற்றும் தொடர்ந்த நிலையில், அகர வரிசையின்படி தமிழகத்துக்கு, நேற்று மதியம் 2:15 மணியளவில் வாய்ப்பு கிடைத்தது.முதல் நபராக உறுதிமொழி ஏற்க வந்த, திருவள்ளூர் எம்.பி., சசிகாந்த் செந்தில், 'தலித் பழங்குடியினர், சிறுபான்மையினர் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும். ஜெய்பீம்.. ஜெய் சம்விதான்' என்று கோஷத்துடன் துவங்கி வைத்தார். சம்விதான் என்பது அரசியல் சாசனத்தை குறிக்கும். உறுதிமொழியில் இல்லாத வார்த்தைகளை சொல்வதா என பா.ஜ., உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அடுத்து வந்த கலாநிதி, ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோருக்கு வாழ்க சொல்லி விட்டு, 'திராவிடம் வாழ தளபதி வாழ்க' என்று புதிய கோஷத்தை போட்டுவிட்டு சென்றார். தாய், தந்தைக்கு நன்றி
'வேண்டாம் நீட், நீட்டை தடை செய்' என, தயாநிதி கோஷம் எழுப்பினார். அடுத்த வந்த அனைவரும் அதே பாணியில் கையை மடக்கி முஷ்டியை உயர்த்தி, உதயநிதி உட்பட அனைவருக்கும் வாழ்க கோஷம் போட்டு முடித்தனர்.சூப்பர் சீனியரான டி.ஆர்.பாலு யாரையும் வாழ்த்தி கோஷம் போடாமல், வணக்கம் மட்டும் கூறிவிட்டுச் சென்றார். வேலுார் எம்.பி., கதிர் ஆனந்த், கடந்த ஆட்சியில் உறுதிமொழி ஏற்கும்போது செய்ததைப் போலவே, 'தாய், தந்தைக்கு நன்றி' என்றார். கிருஷ்ணகிரி தொகுதி காங்., உறுப்பினர் கோபிநாத், தெலுங்கில் உறுதிமொழி ஏற்று, கடைசியாக 'நன்றி வணக்கம்' என்றார். திருவண்ணாமலை அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி மலையரசன் ஆகியோர் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஆகியோரை தவிர அமைச்சர் எ.வ.வேலுவுக்கும் 'வாழ்க' கோஷம் எழுப்பினர்.கோவை எம்.பி., கணபதி ராஜ்குமார், தன் கட்சித் தொண்டர்கள், தாய் தந்தை ஆகியோருக்கு நன்றி கூறினார்.நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் தன் மாவட்டம், வட்டம், கிராமம், தாய், தந்தை பெயர்கள் எல்லாம் கூறி, கட்சித் தலைவர்கள் பெயர்களை எல்லாம் மறக்காமல் வாசித்தார்.எல்லா தலைவர்களின் பெயர்களையும் கூறி வாழ்க கோஷமிட்ட தென்காசி எம்.பி., ராணி ஸ்ரீகுமார் மறக்காமல் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பெயரை கூறி வாழ்க போட்டு நடையை கட்டினார்.தன் அப்பாவை போலவே ஆர்ப்பாட்டங்களில் கோஷம் போடுவது போல கைகளை உயர்த்தி மதச்சார்பின்மை, சமூகநீதி அரசியல், சமத்துவம் ஆகிய அனைத்துக்கும் வாழ்க போட்டுச் சென்றார், திருச்சி எம்.பி.,யான துரை வைகோ.பெரம்பலுார் எம்.பி., அருண், பார்வையாளர் மாடத்தை வினாடிக்கு ஒருமுறை பார்த்துக் கொண்டே 'கே.என்.நேரு - சாந்தா தம்பதியின் மகனான நான்' என்று துவங்கி, நிறைய வாழ்க கோஷங்களை போட்டுச் சென்றார். பாரத் ஜோடோ
தி.மு.க., இளைஞர் அணி செயலரும், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி பெயரை குறிப்பிட்ட தி.மு.க., - எம்.பி.,க்கள், வருங்கால தமிழகம், எங்களின் மன்னர் என்றெல்லாம் குறிப்பிட்ட போது, ஓரளவுக்கு தமிழ் தெரிந்த வட நாட்டு எம்.பி.,க்களும் புன்னகையுடன் பார்த்தனர்.தன் கட்சி எம்.பி.,யான ரவிக்குமார் நிறைய கோஷங்களை போட்டு உறுதிமொழி ஏற்க, விடுதலை சிறுத்தைகள் தலைவரான திருமாவளவனோ, 'ஜெய் டெமாக்ரசி, ஜெய் கான்ஸ்டிடியூஷன்' என்று முழக்கமிட்டு அமர்ந்தார்.மயிலாடுதுறை காங்., - எம்.பி., சுதா மட்டும்தான், 'தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் மீது உளமாற உறுதி கூறுகிறேன்' என கூறிவிட்டு 'ஜோடோ ஜோடோ.. பாரத் ஜோடோ' என்று கூறிச் சென்றார்.உறுதிமொழி மற்றும் வழக்கமான வாழ்க பலவற்றை போட்டுவிட்டு, 'காவிரியில் நீரைத் திறந்து டெல்டா விவசாயிகளைக் காப்பாற்று' என்று தஞ்சாவூர் எம்.பி., முரசொலி கூறினார்.கன்னியாகுமரி எம்.பி., விஜய் வசந்த், தன் ஜாதி பெயர் வரும்படி வாசகங்களை அமைத்து உறுதிமொழியை வாசிக்கத் துவங்கி, காமராஜர், ராஜிவ் ஆகியோருக்கு வாழ்க போட்டார்.யாருக்கும் வாழ்க கோஷம் போடாமல், ராஜா, கனிமொழி, கார்த்தி சிதம்பரம், ராபர்ட் புரூஸ் ஆகியோர் உறுதிமொழியை மட்டும் வாசித்தனர்.'உறுதிமொழி ஏற்பு வாசகங்களைத் தவிர வேறு எதுவும் சபைக்குறிப்பில் இடம்பெறாது' என்று இடைக்கால சபாநாயகர் முதலிலேயே அறிவித்திருந்தார்.- நமது டில்லி நிருபர்