உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தங்கவயல் நகராட்சி தலைவராக தமிழ் பெண் தேர்வு துணை தலைவர் பதவியிலும் தமிழருக்கே அதிர்ஷ்டம்

தங்கவயல் நகராட்சி தலைவராக தமிழ் பெண் தேர்வு துணை தலைவர் பதவியிலும் தமிழருக்கே அதிர்ஷ்டம்

தங்கவயல்: தங்கவயல் நகராட்சியின் இரண்டாம் கட்ட தலைவராக, யாரும் எதிர்பாராத வகையில், காங்கிரசின் 14வது வார்டு கவுன்சிலரும், தனியார் உயர்நிலை பள்ளி ஆசிரியையுமான ஆர்.இந்திரா காந்தி; துணைத் தலைவராக 32-வது வார்டு கவுன்சிலர் எம்.ஜெர்மன் ஜூலியட் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.நகராட்சி வரலாற்றில் முதன் முறையாக போட்டியின்றி தேர்வு நடந்துள்ளது. இருவருமே தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.தங்கவயல் நகராட்சியின் முதற்கட்ட தலைவர், துணைத் தலைவர் பதவிக்காலம் முடிந்து, 15 மாதங்களுக்கு பின், நேற்று தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.தலைவர் பதவி, எஸ்.சி., - பெண்; துணைத் தலைவர் பதவி, பிற்படுத்தப்பட்டோர் ஏ பிரிவுக்கு என இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டிருந்தது.

தேர்வு கூட்டம்

புதிய தலைவர் யார் என்பதை தேர்வு செய்ய, நேற்று காலை 8:45 மணிக்கு ராபர்ட்சன்பேட்டை விவேக் நகரில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா அலுவலகத்தில் 14 காங்கிரஸ், 13 சுயேச்சை, ஒரு ம.ஜ.த., கவுன்சிலர் என 28 பேர் கூடி ஆலோசித்தனர். இவர்களுக்கு காலை சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.நகராட்சி அலுவலகத்தில், காலை 9:00 முதல் 11:00 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் அதிகாரியான கோலார் மாவட்ட உதவி கலெக்டர் டாக்டர் மைத்ரி, தங்கவயல் தாசில்தார் நாகவேணி, நகராட்சி ஆணையர் பவன்குமார் ஆகியோர் வேட்பு மனுவை பெறுவதற்காக காத்திருந்தனர்.காலை 10:15 மணிக்கு, எம்.எல்.ஏ., ரூபகலாவுடன், 28 கவுன்சிலர்களும் நகராட்சி வளாகத்திற்கு வந்தனர். அதுவரை தலைவர், துணைத் தலைவர் வேட்பாளர் யார் என அறிவிக்கப்படாமல், 'சஸ்பென்ஸ்' நிலவியது. காலை 10:45 மணிக்கு, 'தலைவர் பதவிக்கு ஆர்.இந்திரா காந்தி, துணைத் தலைவர் பதவிக்கு எம்.ஜெர்மன் ஜூலியட் மனு தாக்கல் செய்வர்' என்று ரூபகலா அறிவித்தார்.

கவுன்சிலர்கள் அதிர்ச்சி

இதை கேட்ட அங்கிருந்த கவுன்சிலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும், வெளியில் காட்டி கொள்ளவில்லை.எம்.எல்.ஏ., அறிவித்தவுடன், இருவரும் தேர்தல் அதிகாரியிடம் மனு தாக்கல் செய்தனர். மனு தாக்கல் முடியும் நேரம் வரை, வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.மதியம் 1:10 மணிக்கு பரிசீலனை நடந்தது. 1:15 மணிக்கு, தேர்தல் அதிகாரியான உதவி கலெக்டர் டாக்டர் மைத்ரி, ''நகராட்சியின் இரண்டாம் கட்ட தலைவர் பதவிக்கு இந்திரா காந்தியும், துணைத் தலைவர் பதவிக்கு ஜெர்மன் ஜூலியட் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர். வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால், இருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்,'' என்றார்.

பதவியேற்பு

தொடர்ந்து, இருவரும் நகராட்சி பதிவேட்டில் கையெழுத்திட்டு பதவியேற்றனர். பின், நகராட்சி வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு இருவரும் மாலை அணிவித்தனர். தங்கவயல் நகராட்சி வரலாற்றில், முதன் முறையாக போட்டியின்றி தேர்வு நடந்து உள்ளது. புதிய தலைவரான இந்திரா காந்தி, உரிகம் வில்லியம் ரிச்சர்டு ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியையாக உள்ளார். இவர்கள் இருவருக்கும் 14 மாதம் மட்டுமே பதவி காலம் உள்ளது. இருவருமே தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.--ஆர். இந்திராகாந்தி, புதிய தலைவர்

எனக்கு தலைவர் பதவி கிடைத்தது பெரிய அதிசயம். எம்.எல்.ஏ., ரூபகலாவுக்கு விசுவாசமாக இருப்பேன். தங்கவயல் கவுன்சிலர்கள் அனைவரும், ஒரே குடும்பமாக ஒருங்கிணைந்து, அனைவரின் ஒத்துழைப்புடன் நகர வளர்ச்சி பணிகளை மேற்கொள்வோம். குடிநீர், சுகாதாரம், மின் விளக்கு பிரச்னைகள் தீர முன்னுரிமை அளிப்பேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை