மணிப்பூரில் வன்முறையால் பதற்றம்; ட்ரோன் தாக்குதலை முறியடிக்க தீவிரம்
இம்பால் : மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில், நேற்று முன்தினம் நிகழ்ந்த வன்முறையில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, மாநிலம் முழுதும் பதற்றம் நிலவுகிறது. 'ட்ரோன்' எதிர்ப்பு சிஸ்டம் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை, பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தி வருகின்றனர்.முதல்வர் பைரேன் சிங் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கும் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், 2023 மே மாதம், கூகி - மெய்டி பிரிவினரிடையே இனக் கலவரம் வெடித்தது. இதில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கைகளால், மணிப்பூரில் இயல்புநிலை படிப்படியாக திரும்பி வந்த நிலையில், தற்போது மீண்டும் வன்முறை சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன.கடந்த முறை போலல்லாமல், இந்த முறை, ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள், வெடி மருந்துகள் நிரப்பிய ராக்கெட் உள்ளிட்டவற்றால், ஆயுதமேந்திய குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இது, பாதுகாப்புப் படையினருக்கு சவாலாக உள்ளது.இந்நிலையில், மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில், நேற்று முன்தினம் நிகழ்ந்த வன்முறையில் ஆறு பேர் கொல்லப்பட்டதை அடுத்து, மாநிலம் முழுதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இது குறித்து, மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:மணிப்பூரில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. இதுவரை புதிய வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. ஆனாலும், பதற்றம் நீடிக்கிறது. பல்வேறு மாவட்டங்களின் எஸ்.பி.,க்கள், பாதுகாப்புப் படையினருடன் ஒருங்கிணைந்து தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.இம்பால் பள்ளத்தாக்கு பகுதிகளில், அசாம் ரைபிள்ஸ் படையினர், ட்ரோன் எதிர்ப்பு சிஸ்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், சந்தேகத்துக்குரிய பகுதிகளில், ட்ரோன் வாயிலாக பாதுகாப்புப் படையினர் கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.மணிப்பூர் கவர்னர் லக் ஷ்மண் ஆச்சார்யாவை, முதல்வர் பைரேன் சிங் மற்றும் ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ.,க்கள், நேற்று முன்தினம் சந்தித்து, எட்டு அம்சங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை அளித்தனர்.அதில், 'நம் அண்டை நாடான மியான்மர் எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் ஒருங்கிணைந்த குழுவின் கட்டுப்பாட்டை, மணிப்பூர் அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.'மத்திய, மாநில அரசு மற்றும் கூகி சமூக குழுக்களுக்கு இடையேயான முத்தரப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், 'மணிப்பூரில் தங்களின் கட்டுப்பாட்டில் தனி நிர்வாக பகுதியை அறிவிக்க வேண்டும் என்ற கூகி குழுவினரின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க கூடாது. 'வன்முறையை கட்டுப்படுத்த மாநில அரசுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளும் அதில் இடம் பெற்று உள்ளதாக கூறப்படுகிறது.