| ADDED : ஆக 30, 2024 02:30 AM
புதுடில்லி: பீஹாரைச் சேர்ந்த திருநங்கை ரேஷ்மா பிரசாத், தன் ஆதார் அட்டையுடன், பான் எனப்படும் வருமான வரிக்கணக்கு தாக்கலுக்கான அட்டையை இணைக்க முயன்றார். கடந்த 2012ல் பெறப்பட்ட அவரது பான் அட்டையில், அவரது பாலினம் ஆண் என உள்ளது. திருநங்கையாக மாறிய அவரது ஆதார் அட்டையில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பிரிவு இருப்பதால், அதில் திருநங்கை என குறிப்பிடப்பட்டுள்ளது.இதனால், ஆதாருடன் பான் அட்டையை இணைக்கும் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, பான் அட்டையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பிரிவை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிடும்படி, 2018ல் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, 'மூன்றாம் பாலினத்தவர்கள் பான் அட்டைக்கு விண்ணப்பிக்கும்போது, திருநங்கை உரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ், கலெக்டர்கள் வழங்கும் பாலின மாற்றத்துக்கான அடையாள சான்றிதழை சமர்ப்பிக்கலாம். அது, உரிய ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.