உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாயமான சிறுவன் சடலமாக மீட்பு பள்ளிக்கு தீ வைத்த பொதுமக்கள்

மாயமான சிறுவன் சடலமாக மீட்பு பள்ளிக்கு தீ வைத்த பொதுமக்கள்

பாட்னா: பீஹாரில் மாயமான, 3 வயது சிறுவன் பள்ளி வளாகத்தில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அந்த பள்ளிக்கு பொதுமக்கள் தீ வைத்து எரிக்க முயன்றதுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவுகிறது. இது தொடர்பாக பீஹாரில் பல இடங்களில் நேற்று போராட்டங்கள் வெடித்தன. பீஹாரின் பாட்னாவில் உள்ள ராம்ஜிசாக் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.

தேடுதல் வேட்டை

இங்கு படித்து வந்த 3 வயது சிறுவன், நேற்று முன்தினம் மாலை பள்ளிக்கு டியூஷன் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, பல்வேறு பகுதிகளில் தேடிய பெற்றோர், பள்ளி நிர்வாகத்தினரிடம் சென்று முறையிட்டனர். சிறுவன் பள்ளிக்கு வந்த பின் வீடு திரும்பவில்லை என்று கூறியபோதும், பெற்றோரை திசைதிருப்பும் வகையில் பள்ளி நிர்வாகத்தினர் பதிலளித்ததாக கூறப்படுகிறது. பல மணி நேரம் அங்கேயே அவர்கள் காத்திருந்த நிலையில், சிறுவனின் உறவினர்கள் பள்ளி வளாகத்தில் நேற்று காலை தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அங்கிருந்த சாக்கடை ஒன்றில் சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதையடுத்து, அவர்கள் அங்குள்ள வாகனங்கள் மற்றும் பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர். ஆத்திரம் அடங்காத நிலையில் பள்ளி வளாகத்துக்கு தீ வைத்தனர். இதில், ஒன்றிரண்டு அறைகளில் தீ பிடித்து அங்கிருந்த பொருட்கள் கருகின.அவர்களுடன் அப்பகுதி மக்களும் சேர்ந்து, பள்ளியில் இருந்த பொருட்கள், வாகனங்களை சாலைக்கு எடுத்து வந்து தீ வைத்து எரித்தனர்; சாலை மறியலிலும் ஈடுபட்டனர். பாட்னாவின் பல இடங்களில் இது தொடர்பாக போராட்டங்கள் நடந்ததால் நகரில் பதற்றம் நிலவியது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

போராட்டம்

பள்ளி மற்றும் சுற்றி யுள்ள பகுதிகளுக்கு விரைந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கலைந்து போகச் செய்தனர். இது குறித்து எஸ்.பி., சந்திரபிரகாஷ் கூறுகையில், ''பள்ளிக்கு சிறுவன் வந்தது, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால், அவன் அங்கிருந்து வெளியே சென்றதாக தெரியவில்லை.''சிறுவன் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், பள்ளி நிர்வாகத்தினர் மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை