கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், உயிரிழந்த பெண்ணின் பெற்றோருக்கும், மருத்துவமனை நிர்வாகத்தினருக்கும் இடையேயான தொலைபேசி அழைப்புகளின் உரையாடல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில், முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்த, 31 வயதான பயிற்சி பெண் டாக்டர், ஆக., 9ல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். குற்றச்சாட்டு
இந்த சம்பவத்தில், போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்கிறது. தங்களது மகளை சந்திக்க மூன்று மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்ததாக, உயிரிழந்த பெண் டாக்டரின் பெற்றோர் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், தற்போது மருத்துவமனை நிர்வாகத்தினருக்கும், அவர்களுக்கும் இடையேயான இரண்டு தொலைபேசி அழைப்புகளின் உரையாடல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. முதல் ஆடியோ கிளிப்பில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தைக்கும், ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை உதவி கண்காணிப்பாளருக்கும் இடையேயான உரையாடல் உள்ளது. பிரச்னை
அதில் பேசிய பெண் ஒருவர், 'உங்கள் மகளின் உடல்நிலை மோசமாக உள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என்ன பிரச்னை என்பது தெரியவில்லை; மருத்துவமனைக்கு வாருங்கள்' என கூறுவது போல் உள்ளது. இரண்டாவது ஆடியோ கிளப்பில், 'உங்கள் மகள் இறந்து விட்டார். அவர் தற்கொலை செய்திருக்கலாம். மருத்துவமனையில் போலீசார் உள்ளனர்; சீக்கிரம் வாருங்கள்' என, உயிரிழந்த பெண் டாக்டரின் தந்தையிடம் ஆண் ஒருவர் கூறுவது போல் உள்ளது. இந்த ஆடியோ கிளிப்புகளின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை.
'மிரட்டவில்லை'
பெண் டாக்டர் மரணத்துக்கு நீதி கேட்டும், குற்றவாளிக்கு விரைவில் தண்டனை வழங்கக் கோரியும், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் பயிற்சி டாக்டர்கள், 21 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.அவர்களை முதல்வர் மம்தா பானர்ஜி மிரட்டியதாகவும் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என, அவர் கூறியதாகவும் தகவல் வெளியானது. இது குறித்து நேற்று விளக்கம் அளித்த முதல்வர் மம்தா, 'பயிற்சி டாக்டர்களுக்கு எதிராக நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. என்னை பற்றி வதந்தி பரப்புகின்றனர். அவர்களை நான் ஒருபோதும் மிரட்டவில்லை' என்றார்.