ஹைதராபாத்: ''தேசத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் வெங்கையா நாயுடு. அவரது வாழ்க்கை பயணம், பல்வேறு அனுபவங்களால் நிறைந்தது,'' என, பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் 75வது பிறந்த நாளையொட்டி, அவரது சுயசரிதை மற்றும் அவர் தொடர்பான மற்ற இரு புத்தகங்களை வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்ற பிரதமர் மோடி, புத்தகங்களை வெளியிட்டு பேசியதாவது:முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அர்ப்பணிப்பு, பொது சேவையில் அசைக்க முடியாத தலைவராக திகழும் அவரை, நாம் போற்றி கொண்டாட இது ஒரு சிறந்த தருணம். வெங்கையா நாயுடுவின் சுயசரிதை மற்றும் மற்ற இரு புத்தகங்களை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த புத்தகங்கள் மக்களை ஊக்குவிக்கும்; தேச சேவைக்கான சரியான திசையை காட்டும் என நம்புகிறேன்.ஒரு விவசாயியின் மகனாக இருந்து, மத்திய அமைச்சர் மற்றும் துணை ஜனாதிபதி என, உயர் பதவிகளை வகித்த வெங்கையா நாயுடுவின் பயணம் பல அனுபவங்களால் நிறைந்தது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில், கட்சியின் மூத்த தலைவராக இருந்தும், கிராமங்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு சேவை செய்ய, ஊரக வளர்ச்சித் துறையை அவர் தேர்ந்தெடுத்தார்.நாட்டில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட போது, இளைஞராக இருந்த வெங்கையா நாயுடு, அதற்கு எதிரான போராட்டத்தில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். இதனால், அவர் 17 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். ஆந்திராவில் பா.ஜ.,வை வலுப்படுத்துவதிலும், கிராமங்களுக்குச் சென்று பணியாற்றுவதிலும், அனைத்து தரப்பு மக்களை ஒருங்கிணைப்பதிலும் வெங்கையா நாயுடு பெரும் பங்கு வகித்தார். ராஜ்யசபா தலைவராக அவர் பதவி வகித்த போது, ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370வது பிரிவை ரத்து செய்வதற்கான மசோதா, அரசுக்கு பெரும்பான்மை இல்லாவிட்டாலும், கம்பீரமாகவும், கண்ணியமாகவும், கவுரவமாகவும் நிறைவேற்றப்பட்டது. வெங்கையா நாயுடு போன்ற லட்சக்கணக்கான செயல்வீரர்களின் முயற்சியால், பா.ஜ., தற்போது ஆல மரமாக வளர்ந்துள்ளது. 2047ல் அவர் 100வது பிறந்த நாளை கொண்டாடும் போது, நம் நாடு வளர்ந்த நாடாக உருவெடுக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு கூறுகையில், ''வளர்ச்சியும், நலனும் கைகோர்க்க வேண்டும். இலவசங்களுக்கு ஆசைப்பட்டு, மக்களை சோம்பேறிகளாக்கக் கூடாது. ''நாடு முழுதும் கோடிக்கணக்கான மக்களுக்கு இலவச ரேஷன் வழங்குகிறீர்கள். அது தேவைப்படும் வரை தொடர வேண்டும். அதே நேரத்தில், திறன் மேம்பாடு காலத்தின் தேவை,'' என்றார்.