உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யானைகள் நடமாட்டம் கண்காணிக்க ஹாசனில் இணையதளம் துவக்கம்

யானைகள் நடமாட்டம் கண்காணிக்க ஹாசனில் இணையதளம் துவக்கம்

ஹாசன்:யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க, ஹாசனில் 'ஆனேல்லி.காம்' இணையதளம் சோதனை முறையில் துவக்கப்பட்டு உள்ளது.வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வரும் யானைகள், விவசாய நிலங்களுக்குள் புகுந்து விளை நிலங்களை நாசப்படுத்தி வருகின்றன. அத்துடன், பொது மக்களும் தாக்கப்பட்டு மரணமடையும் சம்பவங்களும் நடக்கின்றன.இந்த அசம்பாவிதங்களை தவிர்க்க, வனத்துறை சார்பில், 'aaneelli.com' என்ற இணையதளம் துவக்கப்பட்டு உள்ளது. யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க, நகரின் ஆரண்ய பவனில் வனக்கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது.போலீஸ் துறை போன்று, 24 மணி நேரமும் மூன்று ஷிப்ட்களில், பணியாளர்கள் பணியில் இருப்பர். மாவட்டத்தில் வன விலங்குகளின் நடமாட்டம் குறித்து, வனத்துறையின் யானைகள் அதிரடிப்படை மற்றும் விரைவுப்படையினர் கண்காணித்து வருகின்றனர். இருப்பினும், கட்டுப்பாட்டு அறை இல்லாமல், யானைகளால் ஏற்படும் அழிவை தடுப்பது சிரமம்.இந்த இணையதளம் வாயிலாக, 'ஜி.பி.எஸ்.,' கருவி பொருத்தப்பட்ட ஆறு வாகனங்களின் நடவடிக்கைகளை கண்காணித்து, யானைகளை விரட்டலாம். இணையதளத்தில், பொது மக்கள் தங்கள் பிரச்னைகளை பதிவு செய்தால், அவர்களுக்கு துறையினர் பதிலளிப்பர்.மாவட்ட வனத்துறை அதிகாரி சவுரப் குமார் கூறியதாவது:சக்லேஷ்பூர், ஆலுார், பேலுார், அரகலகூடு தாலுகாக்களில் சுற்றித்திரியும் யானைகள் குறித்து, கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி கண்காணிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.யானைகள் எங்கே உள்ளன; குழுவாகவா அல்லது தனியாகவா; கிராமங்கள் அல்லது நகரங்களின் அருகில் உள்ளனவா, தொலைவில் உள்ளதா என்பது போன்ற தகவல்கள், கூகுள் மேப் மற்றும் செயற்கைகோள் வரை படத்தின் உதவியுடன் கிடைக்கும். அதை கண்காணிக்கும் ஊழியர்கள், பேரிடரை தவிர்க்க உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளிப்பர்.மாவட்டத்தில் முன்னோடியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டம் வெற்றி பெற்றால், வன விலங்குகள் அதிகம் உள்ள மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.ஆனேல்லி.காம் இணையதளத்தில் யானைகள்பற்றிய தகவல்களை, ஹாசன் வனத்துறை அதிகாரி சவுரப் குமார் விளக்கினார். இடம்: ஹாசன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை