பெங்களூரு: பயணியரின் வசதிக்காக, 40 புதிய வழித்தடங்களில் பி.எம்.டி.சி., பஸ்கள் இயக்கப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பஸ்களில் 70 சதவீதம் இருக்கைகள் நிரம்புகின்றன.இது குறித்து, பி,எம்.டி.சி., வெளியிட்ட அறிக்கை:பயணியரின் வேண்டுகோளுக்கு இணங்கி, புதுப்புது வழித்தடங்களில் பி.எம்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. கடந்த ஓராண்டில் 40 புதிய வழித்தடங்களில், பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டது. இது வெற்றி அடைந்துள்ளது. பஸ்கள் 70 சதவீதம் நிரம்பி ஓடுகின்றன.புதிய லே -- அவுட்டுகள், மெட்ரோ பாதைகள் என, பயணியரின் வேண்டுகோள் வந்துள்ள இடங்களில், பஸ்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இவற்றில் எந்த வழித்தடங்களில் பயணியர் பற்றாக்குறை உள்ளதோ, அங்கு சில மாற்றங்கள் செய்ய பி.எம்.டி.சி., முடிவு செய்துள்ளது.நடப்பாண்டு துவங்கப்பட்ட வழித்தடங்களில், துமகூரு சாலையின் மாதவரா, கே.எஸ்.ஆர்., லே - அவுட் மெட்ரோ பீடர் உட்பட, பல வழித்தடங்களில், பஸ் போக்குவரத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.நகரில் இரண்டு மாதங்களுக்கு, ஒரு புதிய வழித்தடத்தை பி.எம்.டி.சி., அறிமுகம் செய்கிறது.புதிய வழித்தடங்களை கண்டறிய, பி.எம்.டி.சி., பல வழிகளை கையாள்கிறது. பஸ் போக்குவரத்து தேவைப்படும் இடங்களை ஆய்வு செய்கிறது. அடுக்கு மாடி குடியிருப்புகள், லே - அவுட்டுகளில் ஆலோசனை நடத்தி, கருத்துகள் கேட்டறிகிறது. பஸ் ஓட்டுனர்கள், நடத்துனர்களிடமும் கருத்து கேட்கிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.