உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமைச்சர் பதவியை நிராகரித்தது ஏன்? தேசியவாத காங்., தலைவர் விளக்கம்!

அமைச்சர் பதவியை நிராகரித்தது ஏன்? தேசியவாத காங்., தலைவர் விளக்கம்!

புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சியில், தங்களுக்கு தனிப்பொறுப்புடன் இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது முறையானதல்ல என்பதால் நிராகரித்ததாக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் குறிப்பிட்டார்.பிரதமர் மோடி தலைமையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நேற்று முன்தினம் பதவியேற்றது. இதில், கூட்டணி கட்சிகளுக்கு, 11 அமைச்சர் பதவிகள் அளிக்கப்பட்டன.மஹாராஷ்டிராவில் கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு, தனிப்பொறுப்புடன் இணையமைச்சர் பதவி வழங்க, பா.ஜ., முன் வந்தது. ஆனால், அதை தேசியவாத காங்., நிராகரித்தது.இது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், எதிர்க்கட்சிகளும் விமர்சனத்தை துவக்கியுள்ளன. காத்திருப்போம்இந்நிலையில், தேசியவாத காங்., தலைவர் அஜித் பவார் கூறியுள்ளதாவது:எங்கள் கட்சியைச் சேர்ந்த பிரபுல் படேலுக்கு, மோடி அரசில் தனிப்பொறுப்புடன் இணையமைச்சர் பதவி தருவதாக கூறினர். அவர், பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில், கேபினட் அமைச்சராக இருந்தவர். அதனால், இணையமைச்சர் பொறுப்பை ஏற்பது சரியானதாக இருக்காது.இதை பா.ஜ.,வுக்கும் தெரிவித்தோம். தற்போதைக்கு நாங்கள் பதவியேற்கவில்லை. சில நாட்கள் காத்திருக்கத் தயார் என்றும் கூறினோம்.மற்றபடி இதனால், கூட்டணிக்குள்ளேயோ, மஹாராஷ்டிரா அரசிலோ எந்தக் குழப்பமும் இல்லை. நாங்கள் கூட்டணியில் தொடர்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.ஆச்சரியம் இல்லைஇது குறித்து தேசியவாத காங்கிரஸ் -- சரத் சந்திர பவார் பிரிவின் எம்.பி., சுப்ரியா சுலே கூறியுள்ளதாவது:காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், பிளவுபடாத தேசியவாத காங்கிரசுக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டது. எத்தனை எம்.பி.,க்கள் வைத்திருக்கிறீர்கள் என்ற கணக்கை பார்க்காமல், கூட்டணி கட்சிகளை நட்பு கட்சிகளாக கருதி, உரிய மரியாதை கொடுத்தனர்.கடந்த, 10 ஆண்டுகளாக, பா.ஜ.,வை நாம் பார்த்து வருகிறோம். கூட்டணி கட்சிகளுக்கு அவர்கள் எவ்வளவு மரியாதை கொடுக்கின்றனர், எப்படி நடத்துகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அதனால், இதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

பதிவை நீக்கிய ராஜிவ்!

பிரதமர் மோடியின் முந்தைய ஆட்சியில், மத்திய இணை அமைச்சராக இருந்த ராஜிவ் சந்திரசேகர், கேரளாவின் திருவனந்தபுரத்தில் போட்டியிட்டு, காங்., வேட்பாளர் சசி தரூரிடம் தோல்வி அடைந்தார்.இந்நிலையில், தன் சமூக வலைதளத்தில் நேற்று பதிவு ஒன்றை வெளியிட்டார். அதன் விபரம்:என், 18 ஆண்டுகால பொது வாழ்க்கை இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதில், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மூன்றாண்டுகள் பணியாற்றியதில் பெருமை. தேர்தலில் தோல்வி அடைந்தவர் என்ற பெயருடன், என் 18 ஆண்டுகால பொது வாழ்க்கையை முடித்துக் கொள்ள நான் நினைக்காவிட்டாலும் அது அப்படி நிகழ்ந்துவிட்டது.இவ்வாறு குறிப்பிட்டு இருந்தார்.சில மணி நேரங்களுக்கு பின் அந்த பதிவை நீக்கிய ராஜிவ் சந்திரசேகர், 'முந்தைய பதிவு என் எதிர்கால அரசியல் பணி குறித்து குழப்பங்களை ஏற்படுத்தியதால் அதை நீக்கிவிட்டேன். கட்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்' என, குறிப்பிட்டுள்ளார்.

குழப்பிய சுரேஷ் கோபி

கேரளாவில் பா.ஜ., முதல்முறையாக வெற்றிக் கணக்கை துவக்க காரணமாக இருந்த நடிகர் சுரேஷ் கோபிக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கேரள பா.ஜ.,வை சேர்ந்த ஜார்ஜ் குரியனுக்கும் மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இருவரும் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டனர்.பதவி ஏற்றுக் கொண்ட பின், செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு சுரேஷ் கோபி அளித்த பேட்டியில், “எனக்கு இணை அமைச்சர் பதவி வேண்டாம். எம்.பி.,யாக பணியாற்றுவதே என் குறிக்கோள். அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன். எனவே, இணை அமைச்சர் பதவியில் இருந்து விரைவில் விடுவிக்கப்படுவேன். திருச்சூர் வாக்காளர்கள் தவறாக எண்ண மாட்டார்கள். எம்.பி.,யாக என் பணியை சிறப்பாக செய்வேன்,” என, தெரிவித்தார்.இது குழப்பத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து சுரேஷ் கோபி வெளியிட்ட சமூக வலைதள பதிவில், 'மோடி அமைச்சரவையில் இருந்து நான் விலகுவதாக சில ஊடகங்களில் தவறான செய்தி பரப்பப்படுகின்றன. பிரதமர் மோடி தலைமையில், கேரளாவின் வளர்ச்சிக்காக உழைக்க நாங்கள் உறுதி ஏற்றுள்ளோம்' என, குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஆரூர் ரங்
ஜூன் 11, 2024 11:52

சேவை மனப்பான்மையுடன் அரசியலுக்கு வருபவர்கள் பதவியிறக்கம் என ஒதுங்கமாட்டார்கள். ஜனாதிபதி பதவிக்கு நிகரான கவர்னர் ஜெனரல் பதவி வகித்த சி. ராஜகோபாலா சாரியார் தமிழக (சென்னை மாகாணம்) அரசியலில் குழப்பமான நிலை வந்த நேரத்தில் கவுரவம் பார்க்காமல் முதல்வர் பதவியை ஏற்றார். உடனே தனது கட்சி ஆட்கள் யாரும் தலைமைச் செயலகத்தில் நடமாடக் கூடாதென்ற உத்தரவையும் பிறப்பித்தார். சற்றும் சுயநலமற்ற சிறந்த நிர்வாகி. ஆனால் இப்போ கேபினட் அமைச்சர் பதவி கேட்டு அடம்பிடிப்பவர் ஊழல் செய்யும் ஆர்வத்தில் உள்ளாரோ என்னவோ?


தமிழ்
ஜூன் 11, 2024 16:07

ஏற்கனவே ஊழல் வழக்கில் சிக்கியிருந்த அஜித் பவாரை வழக்கிலிருந்து விடுவித்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்த பிஜேபி க்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.


Sampath Kumar
ஜூன் 11, 2024 11:07

பிஜேபி காரணுக்களுக்கு வயிற்றில் நல்ல புளியை கரைக்க பல வாய்ப்புகள் உள்ளது


Rajasekar Jayaraman
ஜூன் 11, 2024 06:48

பிரதமர் பதவி கொடுத்து விடுவோமா.


Kasimani Baskaran
ஜூன் 11, 2024 06:11

அனைவரும் சேர்ந்து கங்கிராசுக்கு முடிவுரை எழுதப்போகிறார்கள் என்று நினைக்கையில் இனிக்கிறது. காங்கிரஸ் கட்சியை கழிக்கவேண்டும் என்ற காந்தியின் கனவை நனவாக்கப்போவது நல்லதுதானே...


Gunasekaran.S
ஜூன் 11, 2024 06:06

சிறப்பான செய்தி


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை