உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,விலிருந்து விலகுவாரா சுமலதா?

பா.ஜ.,விலிருந்து விலகுவாரா சுமலதா?

மாண்டியா லோக்சபா தொகுதியை, குமாரசாமிக்கு தியாகம் செய்ததால், பா.ஜ.,வில் தனக்கு உரிய அந்தஸ்து கிடைக்கும் என எதிர்பார்த்த சுமலதாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எம்.எல்.சி.,யாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்த்த போது, அதுவும் கிடைக்கவில்லை. தற்போது பா.ஜ.,விலேயே தொடரலாமா அல்லது காங்கிரசில் சேரலாமா என்று ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.கடந்த 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில் மாண்டியாவில் சுயேச்சையாக நின்று சுமலதா வெற்றி பெற்றார். அப்போதே அவருக்கு பா.ஜ., ஆதரவளித்து, வேட்பாளரை நிறுத்தவில்லை.நடந்த முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அமைத்தது. அத்துடன் லோக்சபா தேர்தலிலும் மாண்டியா தொகுதி, ம.ஜ.த.,வுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் பா.ஜ., சார்பில் தனக்கு சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த சுமலதா ஏமாற்றம் அடைந்தார். ஆனாலும், கடந்த ஏப்ரலில் அதிகாரபூர்வமாக பா.ஜ.,வில் சுமலதா இணைந்தார்.

பா.ஜ., - ம.ஜ.த.,

அதேவேளையில், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளராக குமாரசாமி போட்டியிட்ட போது, அவருக்கு பிரசாரம் செய்ய ஒருநாள் கூட சுமலதா செல்லவில்லை. ஆனாலும், அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் குமாரசாமி வெற்றி பெற்றார்.மாநில அளவில் தனக்கு உரிய அந்தஸ்து கிடைக்கும் என்று நினைத்த சுமலதாவின் கனவில், பா.ஜ., மீண்டும் மண்ணை வாரி போட்டது. எம்.எல்.சி., தேர்தலில் சீட் கிடைக்கும் என்ற நினைத்தவருக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டது. சி.டி.ரவி, ரவிகுமார், முலே ஆகியோருக்கு சீட் வழங்கப்பட்டது.இதனால் அவர் நொந்து போயுள்ளார். ஒருவேளை அவரை ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுத்து அனுப்பலாம் என்று நினைத்தாலும், இப்போதைக்கு அந்த வாய்ப்பு இல்லை என்றே கூற வேண்டும். இதனால், அவரின் அரசியல் எதிர்காலம் இருண்டுள்ளது.

அடுத்த கட்டம்

அவரது மகன் அபிஷேக்கை, மாநில அரசியலில் ஈடுபடுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மகனின் அரசியலுக்காக மாண்டியா களத்தையே, சுமலதா தியாகம் செய்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால், மகன் அபிஷேக், சினிமாவில் தீவிரமாக இருக்கிறார். அவர், அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்க முடியாது.தற்போது கட்சியின் எந்த நிகழ்ச்சியிலும் அவரை காண முடிவதில்லை. 'மாண்டியாவை தவிர வேறு எங்கும் செல்லமாட்டேன்' என்று கூறும் சுமலதாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்வி எழுந்து உள்ளது.பா.ஜ.,வில் நீடிக்கலாமா அல்லது காங்கிரசில் இணையலாமா என்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசிப்பதாகவும்; இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர்களுடன் திரைமறைவில் பேச்சு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sampath Kumar
ஜூன் 19, 2024 09:05

செய்த சேவைக்கு ? உரிய சன்மானம் இல்லை என்றால் அப்புறம் எப்படி பிழைப்பு நடத்துறது அதுனால புட்டுக்கிட்டாங்க ஹி ஹி


Rpalnivelu
ஜூன் 19, 2024 06:19

அம்பரீஷின் மறைவினால் ஏற்பட்ட அனுதாபத்தால், பாஜக இவரை எதிர்த்து களம் காணாததால், வெற்றி பெற்றவர். இவருக்கென்று அங்கு செல்வாக்கு பூஜ்யம்.


மேலும் செய்திகள்