புதுடில்லி: வழக்கு ஒன்றில் நீதிபதி ஓய்வு பெற்றபின், அவர் அளித்த தீர்ப்பின் முழு விபரம் இணையதளத்தில் பதவியேற்றம் செய்யப்பட்டது என்ற சி.பி.ஐ., தரப்பு குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஐ.ஆர்.எஸ்., எனப்படும் 1999ம் ஆண்டு இந்திய வருவாய் பிரிவு அதிகாரி முரளி மோகன், சென்னையில் வருமான வரித் துறை கூடுதல் கமிஷனராக பணியாற்றினார். கடந்த, 2002 - 2014 கால கட்டத்தில் அவர் வருவாய்க்கு அதிகமாக, 3.28 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இதை சி.பி.ஐ., விசாரித்தது. இது தொடர்பான வழக்கில், அந்த அதிகாரியை விடுவித்து சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு, 2017, மே 15ல் ஒரு வரி உத்தரவை பிறப்பித்தது.இது தொடர்பாக சி.பி.ஐ., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் கூறப்பட்டுள்ளதாவது:இந்த வழக்கில், 2017, மே 15ல் ஒரு வரி தீர்ப்பை தனி நீதிபதி வாசித்தார். உடனடியாக தீர்ப்பின் நகல் கேட்டு விண்ணப்பித்தோம். ஆனால், விரிவான தீர்ப்பு வரவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில், 2-017, மே 26ல் அந்த நீதிபதி ஓய்வு பெற்றார். ஆனால், ஜூலை, 26ம் தேதிதான், எங்களுக்கு விரிவான தீர்ப்பின் நகல் வழங்கப்பட்டது.இதற்கிடையே, இந்த நீதிபதியின் முன் விசாரணையில் இருந்த சில வழக்குகளை மறுபடியும் விசாரிக்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதில் இந்த வழக்கும் உள்ளதாக தெரிகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதை விசாரித்த நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாஷி அமர்வு, சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு பிறப்பித்துள்ள உத்தரவு:இந்த குறிப்பிட்ட வழக்கில், தனி நீதிபதி எந்தத் தேதியில் உத்தரவு பிறப்பித்தார். அந்தத் தீர்ப்பின் முழு விபரம் எப்போது கிடைத்தது, அது எப்போது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது என்ற தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும்.மேலும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ள மறு விசாரணை வழக்குகள் பட்டியலில் இந்த வழக்கும் உள்ளதா என்பதையும் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அமர்வு கூறியது.