உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுய உதவி குழு மூலம் தலித் பெண்களுக்கு உதவும் வாலிபர்

சுய உதவி குழு மூலம் தலித் பெண்களுக்கு உதவும் வாலிபர்

நம் நாடு சுதந்திரம் அடைந்து, 77 ஆண்டுகள் ஆகியும், இன்னும் பல ஊர்களில் தீண்டாமை உயிர்ப்புடன் இருக்கிறது.உயர்ந்த ஜாதியினர், தாழ்த்தப்பட்ட ஜாதியினரை கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் இப்போதும் உள்ளன.தலித் சமூக பெண்களின் நலனுக்காகவும், அவர்களுக்கு உதவி செய்யும் வகையிலும், மகளிர் சுய உதவிக் குழுவை ஒரு வாலிபர் ஆரம்பித்துள்ளார்.ஹாசன் சென்னராயபட்டணா அருகே திண்டகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். சில மாதங்களுக்கு முன்பு, கிராமத்தில் உள்ள கோவிலின் அருகே உள்ள, ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். தலித் என்பதால் அவரை ஹோட்டலுக்குள் அனுமதிக்க உரிமையாளர் மறுத்துவிட்டார். இதனால் அவர் மன வருத்தம் அடைந்தார். இந்த வேளையில், திண்டகூர் கிராமத்தைச் சேர்ந்த தலித் சமூக பெண்களுக்கு, வேலை கிடைப்பதில்லை என்பதை சந்தோஷ் அறிந்தார்.இதையடுத்து சாவித்திரிபாய் புலே என்ற பெயரில், 'சந்தோஷ் மகளிர் சங்கம்' ஆரம்பித்தார். தலித் சமூக பெண்களுக்கு, இந்த சங்கத்தின் மூலம் கடன் உதவி அளிப்பது, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுவது உள்ளிட்டவற்றை சந்தோஷ் செய்து வருகிறார்.ஒரு தனியார் பள்ளிகள் நாடக ஆசிரியராக வேலை செய்யும் இவர், சொந்தமாக நாடக பயிற்சி பள்ளியும் நடத்துகிறார்.தன் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமின்றி, அனைத்து சமூக மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கிறார். மனிதர்கள் அனைவரும் சமம். தீண்டாமை பார்க்கக் கூடாது. அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என, நாடகங்கள் வாயிலாக விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்.இதுகுறித்து சந்தோஷ் கூறிய தகவல்கள்: என் பெற்றோரும், நானும் தீண்டாமையை அனுபவித்து உள்ளோம். சுதந்திர நாட்டில் தீண்டாமை இன்னும் கடைப்பிடிக்கப்படுவது வேதனையாக உள்ளது.நான் பிறந்த வளர்ந்த ஊரில், ஹோட்டலுக்குள் உணவு சாப்பிட செல்ல எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது, மனதிற்கு வேதனையாக இருந்தது. இது பற்றி என் பெற்றோரிடம் கூறியபோது, நாம் இப்படித்தான் வாழ வேண்டும் என்று வருத்தத்துடன் கூறினர்.எனக்கு நேர்ந்த அவமதிப்பு குறித்து, எங்கள் ஊர் தலைவரிடம் கூறியபோது வருத்தம் அடைந்தார். சட்டப்படி நீ எடுக்கும் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருப்பதாகவும் கூறினார்.மனிதர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் மதித்து வாழ வேண்டும். நாம் இந்த பூமியிலிருந்து செல்லும்போது எதையும் எடுத்துச் செல்வதில்லை.வாழும் காலத்தில் அனைவர் அன்பையும் பெறவேண்டும் என்பது என் ஆசை. மகளிர் சுய உதவி குழு ஆரம்பித்த தலித் சமூகப் பெண்களுக்கு உதவுவது மகிழ்ச்சி அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.--- நமது நிருபர் --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை