ஆயுத ஆலையில் வெடி விபத்து ம.பி.,யில் 10 பேர் படுகாயம்
ஜபல்பூர்,மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள கமாரியா பகுதியில், மத்திய பாதுகாப்பு நிறுவனத்தின் ஆயுத தொழிற்சாலை உள்ளது. வெடிகுண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் தயாரிக்கப்படும் இந்த ஆலையில், நேற்று காலை ஏராளமான தொழிலாளர்கள் பணி செய்து கொண்டிருந்தனர்.அப்போது, இங்குள்ள வெடிகுண்டுகள் நிரப்பும் பகுதியில் ஹைட்ராலிக் அமைப்பு சரியாக இயங்காததால் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இது, 5 கி.மீ., சுற்றளவுக்கு பயங்கர சத்தத்துடன் வெடித்ததால், அப்பகுதி மக்கள் பூகம்பம் ஏற்பட்டதாக கருதி வீட்டில் இருந்து ஓட்டம் பிடித்தனர்.இந்த விபத்தில், தொழிற்சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது; ஊழியர்கள் மூவர் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு, அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.