டிராக்டர் - லாரி மோதல் 10 பேர் பலி
மிர்சாபூர்,உத்தர பிரதேசத்தின் பஹாதோஹி மாவட்டத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளர்கள் 13 பேர் வாரணாசி நோக்கி நேற்று அதிகாலை டிராக்டரில் சென்றனர். மிர்சாபூர் - வாரணாசி எல்லை அருகே சென்றபோது அந்த வழியாக வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டரின் பின்பக்கமாக மோதியது. இதில், டிராக்டர் கடுமையாக சேதம் அடைந்தது. தகவலறிந்து சென்ற மீட்புக்குழுவினர், டிராக்டரில் சிக்கிய தொழிலாளர்ககளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், 10 பேர் உயிர் இழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மூன்று பேரை, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.