உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிவாஜி நகர் காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் முதன் முறையாக நாளை 1,008 சங்காபிஷேகம்

சிவாஜி நகர் காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் முதன் முறையாக நாளை 1,008 சங்காபிஷேகம்

சிவாஜி நகர்:சிவாஜி நகர் காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் முதன் முறையாக 1,008 சங்காபிஷேகம் நாளை நடக்கிறது.கார்த்திகை மாதம் மிகவும் மங்களகரமான மாதமாக கருதப்படுகிறது. இம்மாதத்தில் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இந்த மாதத்தில், அனைத்து சிவன் கோவில்களிலும் சோமவார பூஜை, விமரிசையாக கொண்டாடப்படும்.தட்சிணாயண புண்ணிய காலத்தில் கார்த்திகை மாதம் வரும். இந்த மாதத்தில் சந்திரன் மிகவும் சக்தி வாய்ந்தவராக இருப்பார். ஜோதிட சாஸ்திரத்தில் 'மனோகாரகர்' என்று அழைக்கப்படுகிறார்.

தீப உற்சவம்

மேலும் பவுர்ணமி நாளில் தீப உற்சவம் கொண்டாடப்படுகிறது. இந்த புனித மாதத்தில், அனைத்து சிவன் கோவில்களிலும் 108, 1008 என்ற எண்ணிக்கையில் உள்ள சங்காபிஷேகம் நடத்தப்படும்.சங்கு சத்தம் நம்மை சுற்றி உள்ள அனைத்து எதிர்மறை அதிர்வுகளையும் அகற்றும். இது மஹாலட்சுமிக்கும் உகந்தது.சங்கில் தண்ணீர் நிரப்பி, அதில் பல்வேறு வகையான நறுமண பொடிகளை சேர்த்து, சிவ மந்திரங்களை சொல்லி பூஜை செய்யப்படும்.

சிவனுக்கு அபிஷேகம்

பூஜை முடிந்ததும் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படும். எனவே, சிவபெருமான் மகிழ்ந்து அனைவரையும் ஆசிர்வதிப்பார் என்பது ஐதீகம்.சங்காபிஷேகம் செய்வதன் மூலம், சிவபெருமானின் அருளால் நம் பாவங்கள் அனைத்தும் நீங்கி, சுபகாரியங்கள் நடந்து, வாழ்வில் நல்வழிக்கு வழிவகுக்கும்.இதன் பெருமையை எடுத்துக் கூறும் வகையில், கார்த்திகை மாதம் மூன்றாவது திங்கட்கிழமையான வரும் 2 ம் தேதி, பக்தர்கள் மற்றும் அறங்காவலர்களின் ஒருங்கிணைப்புடன் 1,008 சங்காபிஷேகம் நடக்கிறது.இதையொட்டி இன்று மாலை 4:15 மணிக்கு கணபதி பூஜை, மஹா சங்கல்பம், ஸ்வஸ்தி புண்யாஹவச்சனம், 1008 சங்குகளுக்கு முதல் கால பூஜை, முக்கிய கலச பூஜை, சிவ மூல மந்திர ஹோமம், லகு பூர்ணாஹுதி, அஷ்டாவதன சேவை, தீர்த்த பிரசாதம் வழங்கல் நடக்கும்.நாளை (டிச., 2ம் தேதி) காலை 7:15 மணிக்கு கணபதி பூஜை, இரண்டாவது கால சங்கு பூஜை, சிறப்பு ஹோமம், மஹா பூர்ணாஹுதி, சங்கு அபிஷேகம், பிரதான கலச அபிேஷகம், அலங்காரம், மஹா மங்களாரத்திக்கு பின் பிரசாதம் வினியோகிக்கப்படுகிறது.பக்தர்கள் இப்பூஜையில் பங்கேற்று, ஸ்ரீகாசி விசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீகாசி விஸ்வநாதரின் ஆசி பெறுமாறு, ஆர்.பி.வி.ஜி.சி., டிரஸ்டிகள் அழைப்பு விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை