2 பெண்கள் உட்பட 12 நக்சல்கள் சரண்
தண்டேவாடா : சத்தீஸ்கரில், இரு பெண்கள் உட்பட, 12 நக்சல்கள் போலீசில் சரண் அடைந்தனர். சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வகையில், 2020ல், 'வீடு திரும்புவோம்' திட்டம் மாநில அரசால் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தின் படி, தண்டேவாடா மாவட்டத்தில் நேற்று, 12 நக்சல்கள் போலீசில் சரணடைந்தனர். இவர்களில் ஒன்பது பேர், தலைக்கு 28 லட்சம் ரூபாய் பரிசாக அறிவிக்கப்பட்டிருந்தது.இது குறித்து தண்டேவாடா எஸ்.பி., கவ்ரவ் ராய் கூறியதாவது: தற்போது சரணடைந்துள்ள 12 நக்சல்களில், இருவர் பெண்கள். இதுவரை 1,005 நக்சல்கள், மாநில அரசின் புதிய திட்டத்தின் கீழ் சரண் அடைந்துள்ளனர்.நக்சல் அமைப்புகளுக்குள் வளர்ந்துள்ள கருத்து வேறுபாடு, மாவோயிஸ்ட் சித்தாந்தங்களால் ஏற்பட்ட வெறுப்பு, தொடர்ந்து வனப் பகுதியில் தலைமறைவு வாழ்க்கை நடத்துவது போன்ற காரணங்களால் சரண் அடைந்ததாக நக்சல்கள் தெரிவித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.