சமூக நலத்துறை விடுதிகளில் 15,000 போலி மாணவர்கள்
பெங்களூரு: கர்நாடகாவில் சமூக நலத்துறை விடுதிகளில், போலி ஆவணங்கள் தயாரித்து 15,000 மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்தியது தெரியவந்து உள்ளது. இதுகுறித்து விசாரணை நடக்கிறது.கர்நாடக அரசின் சமூக நல துறை, குறிப்பிட்ட சமூகங்களை சேர்ந்த மாணவர்கள் தங்கி படிப்பதற்கு விடுதிகள் கட்டி உள்ளது. மாநிலத்தில் 1,215 விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு படுக்கை, துணிகள், காலணிகள், சோப்பு, டூத் பேஸ்ட், பல் துலக்க பிரஷ் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது.மாணவர்களுக்கு மருத்துவ செலவும் கிடைக்கிறது. மாணவர்களுக்கு உணவு தயார் செய்ய உணவு பொருட்கள், அதற்கு தேவைப்படும் பாத்திரங்களும் வழங்கப்படுகின்றன.இந்நிலையில் மாணவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகளை பெறுவதற்கு, யாத்கிரில் உள்ள சமூக நல துறை விடுதி வார்டன் ஒருவர் முறைகேட்டில் ஈடுபட்டது பற்றி சமீபத்தில் தெரிந்தது. இதுகுறித்து சமூக நல அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மாநிலத்தில் உள்ள அனைத்து சமூக நல விடுதிகளிலும் முறைகேடு நடப்பது தெரிந்து உள்ளது.கடந்த 2023 - 2024 ல் மாநிலத்தின் 31 மாவட்டங்களில் உள்ள, சமூக நல விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை 87,266 ஆக இருந்தது. ஆனால் 2024 - 2025 ல் 1,02,458 ஆக அதிகரித்து உள்ளது. ஒரே ஆண்டில் 15,192 மாணவர்கள் எப்படி சேர்க்கப்பட்டனர் என்று சந்தேகம் எழுந்தது. போலியான மாணவர் சேர்க்கை தான் என்று, சமூக நல அதிகாரிகளே உறுதிப்படுத்தி உள்ளனர்.மாணவர்கள் விடுதியில் தங்கி படிப்பதாக விடுதி அதிகாரிகள், வார்டன்கள் போலியாக ஆவணம் உருவாக்குகின்றனர். மாணவர்களுக்கு அரசிடம் இருந்து கிடைக்கும் சலுகைகளை பயன்படுத்தி கொள்கின்றனர். அரசு பள்ளிகளுக்கு சென்று, குறிப்பிட்ட சமூக மாணவர்களின் சேர்க்கை அட்டையை பெற்று கொள்கின்றனர்.அந்த அட்டைகள் மூலம், மாணவர் பெயரில் ஆவணங்கள் உருவாக்கப்படுகின்றன. விடுதிகளில் அதிகாரிகள் ஆய்வுக்கு செல்லும் போது, மாணவர்கள் குறைவாக இருப்பது பற்றி கேட்டால், சொந்த ஊருக்கு சென்று இருப்பதாக, பொய் கூறியதும் தெரிந்து உள்ளது. இந்த முறைகேடு குறித்து சமூக நல கமிஷனர் ராகேஷ்குமார் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார். விசாரணை நடந்து வருகிறது.