சபரிமலை: திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் நேற்று அளித்த பேட்டி:பம்பையில் ஸ்பாட் புக்கிங் வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆதார் கார்டுடன் வந்தால் அனைவருக்கும் தரிசனத்திற்கான பாஸ் வழங்கப்படும்.இருமுடிக்கட்டில் பாலிதீன் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று தந்திரியும், தேவசம்போர்டும் வேண்டுகோள் விடுத்தும் தொடர்ந்து அதிகளவில் பாலிதீன் வருவது கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது.அரசு, தேவசம்போர்டு நடவடிக்கையால் ஒன்பது நாட்களாக தரிசனம் சுமுகமாக நடைபெறுகிறது. மொத்தம், 6 லட்சத்து, 12,290 பேர் தரிசனம் செய்துள்ளனர்.இந்த ஒன்பது நாட்களில் நேற்று முன்தினம், 84,000 பேர் வந்தபோதும், அனைவரும் நல்ல தரிசனம் செய்து திருப்தியாக திரும்பினர். இதனால் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை கூட்டும் எண்ணம் தேவசம் போர்டுக்கு இல்லை. தேவைப்படுபவர்களுக்கு பம்பையில் ஸ்பாட் புக்கிங்கில் அனுமதி வழங்கப்படும். தேவைப்பட்டால் பம்பையில் ஸ்பாட் புக்கிங் கூடுதல் கவுன்டர் திறக்கப்படும்.ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் வர முடியாத பட்சத்தில், அதை ரத்து செய்ய, சம்பந்தப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.ஆனாலும், ஏராளமானோர் அதை ரத்து செய்வதாக தெரியவில்லை. தினமும் 10 முதல் 15,000 பேர் வரை வராமல் இருக்கின்றனர். இது வேண்டுமென்றே திட்டமிட்டு யாராவது செய்கின்றனரா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.மேலும் 18 படிகளில் போலீசாரின் பணி நேரத்தை 20-ல் இருந்து 15 நிமிடமாக குறைத்தது நல்ல பலனை தந்துள்ளது. 20 நிமிடமாக இருந்த போது, கடைசி ஐந்து நிமிடத்தில் போலீசார் மிகவும் சோர்வுற்று படி ஏற்றும் வேகம் குறைந்தது.அத்துடன் 18 படிகளில் ஏறியதும் கொடி மரத்தின் இரண்டு பக்கங்கள் வழியாக நேரடியாக சென்று மூலவரை வழிபடும் திட்டம், நடப்பு சீசனுக்கு பின்னர் பரிசோதனை ரீதியாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.அதற்கு முன்பாக கேரள அரசு, உயர் நீதிமன்றம், மாஸ்டர் பிளான் கமிட்டி, தந்திரி உள்ளிட்ட அனைவரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.இவ்வாறு மூலவரை தரிசிக்க ஏற்பாடு செய்யும் போது பக்தர்களுக்கு அதிக நேரம் தரிசனம் கிடைக்கும். ஒரு நிமிடத்தில், 80 பேர் மட்டுமே படியில் ஏறுவதால் அந்த 80 பேரும் அந்த குறிப்பிட்ட நேரத்துக்குள் நேரில் தரிசிக்க முடியும் என்பது தேவசம் போர்டு கருத்து.மொத்த வருமானத்தை கணக்கிட்டால் இந்த ஆண்டு 41 கோடியே, 64 லட்சத்து, 65 ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இது, 28 கோடியே, 30 லட்சத்து 20,364 ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 13 கோடியே 33 லட்சத்து 79,801 ரூபாய் கூடுதலாக கிடைத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.