நிலச்சரிவில் சிக்கி 2 பேர் மாயம்; சான்றிதழ் வழங்காமல் அலட்சியம்
கார்வார் : ஷிரூர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாக கருதப்படும் இரண்டு பேருக்கு இறப்பு சான்றிதழை வழங்காமல், மாவட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.உத்தர கன்னடா கார்வார் அருகே ஷிரூரில் ஆறு மாதங்களுக்கு முன்பு நிலச்சரிவு ஏற்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. அந்த சாலை அருகே காளி ஆறும் ஓடுகிறது. ஆற்றின் நடுப்பகுதி வரை மண் சரிந்து விழுந்தது. இதில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததாக கருதப்பட்டது. எட்டு பேர் சடலங்கள் உடனடியாக மீட்கப்பட்டன.ஆனால் கேரளாவை சேர்ந்த லாரி டிரைவர் அர்ஜுன், அங்கோலாவை சேர்ந்த ஜெகநாத், லோகேஷ் ஆகியோரை பற்றி தகவல் தெரியவில்லை. ஆற்றுக்குள் உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடந்தது.இரண்டு மாதங்களுக்குப் பின், அர்ஜுன் உடல் மீட்கப்பட்டது. ஆனால் ஜெகநாத், லோகேஷ் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை. அவர்களின் உடல்களை பற்றி எந்த தகவலும் இல்லை. இருவர் உடல்களையும் தேடும் பணியும் நிறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் இருவரும் உயிரிழந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இருவருக்கும் இறப்பு சான்றிதழ் தர வேண்டும் என்று அவர்களின் குடும்பத்தினர், உத்தர கன்னடா மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் இன்று வரை அவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்காமல் அதிகாரிகள் அலட்சியம் காண்பித்து வருகின்றனர். இது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இடையே ஆதங்கத்தை ஏற்படுத்தி உள்ளது.