வெளிநாட்டு மாணவர்களுக்கு 2 வகை சிறப்பு விசா அறிமுகம்
புதுடில்லி: நம் நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்க வரும் சர்வதேச மாணவர்களுக்காக, இரண்டு சிறப்பு வகை விசாக்களை மத்திய அரசு நேற்று அறிமுகப்படுத்தியது.நம் நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் சேர, வெளிநாட்டு மாணவர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவ்வாறு சேர விரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு விசாக்களை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. சான்றிதழ்
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:வெளிநாடுகளில் உள்ள சர்வதேச மாணவர்கள், இந்தியாவில் படிக்க விரும்புவதால் அவர்களுக்கென பிரத்யேகமான இணையதளத்தை மத்திய கல்வி அமைச்சகம் உருவாக்கியுள்ளது. எஸ்.ஐ.ஐ., எனப்படும் 'ஸ்டூடண்ட் இன் இந்தியா' என்ற போர்டல் வாயிலாக பதிவு செய்யும் மாணவர்கள், அதில் இணைக்கப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இருந்து தங்களுக்கான நிறுவனத்தையும், படிப்பையும் தேர்வு செய்யலாம். இளங்கலை, முதுகலை, ஆய்வு படிப்புகள், சான்றிதழ் படிப்புகள் என பல வகையான பிரிவுகளில் மாணவர்கள் தேர்வு செய்ய முடியும். இந்த இணையதளத்தில் பதிவு செய்யும் மாணவர்களுக்கு பிரத்யேகமாக, 'ஐடி' எனப்படும் ஒரு அடையாள குறியீடு வழங்கப்படும்.தேர்வு செய்த கல்வி நிறுவனத்தில் இருந்து அழைப்பு வருவதை அடுத்து, அதை வைத்து தங்களுக்கான விசாக்களை மாணவர்கள் பெற முடியும். அதற்கு எஸ்.ஐ.ஐ.,யால் வழங்கப்படும் 'ஐடி' அவசியம்.சர்வதேச மாணவர்களின் வசதிக்காக இந்த ஆண்டு, 'இ - ஸ்டூடண்ட் விசா' மற்றும் 'இ - ஸ்டூடண்ட் விசா எக்ஸ்' என்ற இரு விசாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்கள், இ - ஸ்டூடண்ட் விசாவையும், அவருடன் வருபவர்கள் இ - ஸ்டூடண்ட் எக்ஸ் விசாவையும் பயன்படுத்தலாம். இணையதளம்
இந்த விசாக்களை பெற https://indianvisaonline.gov.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம். மாணவர்கள் தங்கள் பெயர், நாடு, பிறந்த தேதி, மொபைல் எண், இ - மெயில் உள்ளிட்ட விபரங்களை அதில் பதிவு செய்ய வேண்டும். விபரங்கள் மற்றும் விண்ணப்பத்தின் நம்பகத்தன்மை எஸ்.ஐ.ஐ., போர்டல் வாயிலாக சரிபார்க்கப்படும். மாணவர்களின் கல்வி நிலையை பொறுத்து, ஐந்து ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் விசாக்கள் வழங்கப்படும். தேவைப்பட்டால், அந்த கால அளவை மாணவர்கள் நீட்டித்து கொள்ளலாம். எஸ்.ஐ.ஐ., வழங்கும், 'ஐடி' இல்லாத மாணவர்கள் இந்தியாவில் கல்வி கற்க முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.