இரு சிறுமியர் பலாத்காரம் இருவருக்கு தலா 20 ஆண்டு
பெலகாவி: இரு சிறுமியர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், இருவருக்கு தலா 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து, பெலகாவி 'போக்சோ' நீதிமன்றம், நேற்று தீர்ப்பளித்தது.பெலகாவி ராய்பாகில் வசிப்பவர் ஆஷிப் தர்மராஜ காம்பளே, 25. இவர் 2016 டிசம்பர் 29ல், அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியை கவர்ச்சிகரமாக பேசி, தன் பைக்கில் அமர்த்தி, மஹாராஷ்டிராவின் கணேஷ்வாடிக்கு அழைத்துச் சென்றார்.அங்குள்ள வீடு ஒன்றில், அடைத்து வைத்து பலாத்காரம் செய்தார். அதன்பின் சிக்கோடியின், அங்கலிக்கு கொண்டு வந்து விட்டுவிட்டு, தப்பினார்.இது தொடர்பாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின்படி விசாரணை நடத்திய ராய்பாக் போலீசார், ஆஷிப் தர்மராஜ காம்பளேவை கைது செய்தனர். பெலகாவி 'போக்சோ' நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.அதே போன்று ராய்பாகை சேர்ந்தவர் அர்பாஜ், 30. இவர் 2018 மே 29ல், 16 வயது சிறுமியை, பைக்கில் வனப்பகுதிக்கு கடத்திச் சென்று பலாத்காரம் செய்தார். இதை வெளியே சொன்னால் கொலை செய்வதாகவும் மிரட்டினார்.இதை தாயிடம் சிறுமி கூறினார். இதுகுறித்து ராய்பாக் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், அர்பாஜை கைது செய்தனர். விசாரணையை முடித்து, பெலகாவி போக்சோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.இரண்டு வழக்குகளிலும் குற்றம் உறுதியானதால், இரு குற்றவாளிகளுக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 10,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.