உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தார்வாடில் அங்கன்வாடி ஊழியர்கள் 26 பேர்... கைது! ஊட்டச்சத்து பொருட்களை விற்றதால் அதிரடி

தார்வாடில் அங்கன்வாடி ஊழியர்கள் 26 பேர்... கைது! ஊட்டச்சத்து பொருட்களை விற்றதால் அதிரடி

கர்நாடகாவில் மொத்தம், 69,919 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இங்கு 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணியர் மற்றும் பிரசவித்த பெண்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. தார்வாட் மாவட்டத்தில் மட்டும் 2,329 அங்கன்வாடி மையங்கள் உளள்ன.

பதுக்கி வைப்பு

இங்குள்ள சில அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள், கர்ப்பிணியருக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவு தானியங்கள், காங்கிரஸ் பெண் பிரமுகர் பைதுல்லா கில்லேதார், அவரது கணவர் பரூக் ஆகியோர், ஹலேகப்பூரில் உள்ள குடோனில் மறைத்து வைத்து, வெளிமார்க்கெட்டில் விற்பனை செயவதாக, உணவு பொது வினியோக துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதன் அடிப்படையில், அதிகாரிகள் மற்றும் கசபாபேட் போலீசார் கடந்த 16ம் தேதி இந்த குடோனில் ரெய்டு நடத்தினர். அப்போது, கோதுமை மாவு, பால் பவுடர், வெல்லம், கடலை மாவு, அரிசி, மசாலா பவுடர் உட்பட 8 டன் எடையிலான 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஊட்டச்சத்து பொருட்கள் மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக, மகளிர், குழந்தைகள் நலத்துறை அதிகாரி கமலவ்வா பைலுார், போலீசில் புகார் அளித்தார். விசாரணை நடத்திய போலீசார், குடோன் உரிமையாளர் முகமது கவுஸ் காலிபா, பொலீரோ வாகன ஓட்டுனர் மஞ்சுநுாத் தேசாய், மற்றொரு வாகன ஓட்டுநர் பசவராஜ் பத்ரா ஷெட்டி, குடோனை வாடகைக்கு எடுத்த கவுதம் சிங் தாகூர், மஞ்சுநாத் மதரா, பக்கிரிரேஷ் ஹாலகி, கிருஷ்ணா மாதரா, ரவி ஹரிஜான் ஆகியோரை கைது செய்தனர்.

சட்டவிரோதம்

இவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்களுக்கு அங்கன்வாடி பொருட்களை சட்ட விரோதமாக வழங்கியது, அங்கன்வாடி ஊழியர்கள் என்பது தெரிந்தது. இதன்படி, ஷாமீன் பானு புஜாவர், பிபி ஆயிஷா, ரேஷ்மா வட்டோ, ஷாஹீன் சக்கேஹரி, பைரோசா முல்லா, பிபி ஆயிஷா ஷேக், ஷாமிமா பானு.மெஹபூப் ஹல்யாலா, சகுந்தலா நியாமதி, சித்ரா உரனிகர், மீனாட்சி பேடகேரி, ஹீனா கவுசர், ஹீனா கவுசர் மேஸ்திரி, ஷீலா ஹிரேமத், ஸ்ருதி கோடபகி, பர்வீன் பானு கலிபா, ரேணுகா கமல்தின்னி, கங்கம்மா பண்டாரே ஆகிய 18 பெண் ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர்.உணவு பொருட்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த காங்கிரஸ் பிரமுகர் என்று கூறிக் கொள்ளும் பைதுல்லா கில்லேதார், அவரது கணவர் பாரூக் ஆகிய இருவரும், ரெய்டு நடந்தபோது அங்கிருந்து தப்பியோடி விட்டனர். தலைமறைவாக உள்ள இவர்களை பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டு உள்ளது.பைதுல்லா கில்லேதார், உள்ளூரில் அங்கன்வாடி சங்கத்தை உருவாக்கி, தன்னை பெரிய தலைவர் போன்று சித்தரித்து கொண்டுள்ளார். அத்துடன், முதல்வர் சித்தராமையா உட்பட பல தலைவர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை காட்டியும் ஏமாற்றி வந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ