இளைஞரை நிர்வாண படம் எடுத்து மிரட்டிய 3 பேர் கைது
திருவனந்தபுரம்:கேரளாவில் ஆசை வார்த்தை கூறி இளைஞரை வீட்டுக்கு வரவழைத்து நிர்வாண படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக இரண்டு பெண்கள் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் மாவேலி கரையைச் சேர்ந்த கவுரி நந்தா 20, என்ற பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து கோழிக்கோடு குந்தமங்கலம் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு அந்த இளைஞரை கவுரி நந்தா அழைத்துச்சென்றார். பின்னர் அந்த இளைஞரை நிர்வாண படம் எடுத்துள்ளார். சில நாட்களுக்கு பின் அந்த படங்களை காண்பித்து கவுரி நந்தா மற்றும் அவருடன் இருந்த திருரங்கடி பனஞ்சேரியைச் சேர்ந்த அன்சிகா 28, இவரது கணவர் முகமது அபிப் 30, ஆகியோர் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இளைஞர் தன் வசம் இருந்த பணத்தை எல்லாம் கொடுத்த பின்னரும் தொடர்ந்து மிரட்டி ஒரு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக பறித்துள்ளனர். இவ்வழக்கில் கவுரி நந்தா, அன்சிகா , முகமது அபிப் ஆகிய மூவரையும் கோழிக்கோடு குந்தமங்கலம் போலீசார் கைது செய்தனர்.