UPDATED : பிப் 24, 2024 03:07 PM | ADDED : பிப் 24, 2024 02:40 PM
புதுடில்லி: 'கிராமங்களில் வளர்ச்சியை உருவாக்குவதில் கூட்டுறவு துறை முக்கிய பங்கு வகிக்கிறது' என பிரதமர் மோடி கூறினார்.நாட்டின் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக டில்லியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, கூட்டுறவு துறை தொடர்பான பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: வளமான பொருளாதாரத்தை உருவாக்குவதிலும், கிராமங்களில் வளர்ச்சியை உருவாக்குவதிலும் கூட்டுறவு துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல் கிராமங்களில் வளர்ச்சியை உருவாக்குகிறது. விவசாயிகள் பயன்பெறும் வகையில், கூட்டுறவு கடன் சங்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு அதிகாரமளிக்கும் நோக்கில் பா.ஜ., அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
மத்திய அரசு நடவடிக்கை
முன்னதாக எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டின் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்துவதற்கான எந்த முயற்சியையும் நமது அரசு விட்டு வைக்கவில்லை. கூட்டுறவுத் துறையை வலுப்படுத்த தொடர்ந்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சத்தீஸ்கரில் நடந்த 'விக்சித் பாரத்' நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது: சத்தீஸ்கரில் முந்தைய காங்கிரஸ் அரசு ஏழைகளை வீடுகள் கட்ட விடாமல் தடுத்தது. அரசு தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை பூஜ்ஜியமாக்குவது மத்திய அரசின் குறிக்கோளாக உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.