புதுடில்லி: 'நாடு முழுவதும், 37 ஆயிரத்துக்கும் அதிகமான கிராமங்கள், மொபைல் போன் இணைப்பு வசதி இல்லாமல் உள்ளன' என, மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா தெரிவித்துள்ளார்.
மத்திய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் மிலிந்த் தியோரா, கடந்த வாரம், பார்லிமென்டில் கூறியதாவது: தற்போது நம்நாட்டில், 5 லட்சத்து, 93 ஆயிரத்து, 731 கிராமங்கள் உள்ளன. இவற்றில், 37 ஆயிரத்துக்கும் அதிகமான கிராமங்கள், இன்னும் மொபைல் போன் வசதியை பெறாமல் உள்ளன. தற்போது நம்நாட்டில், 88 கோடி பேர், மொபைல் போன் வசதியை பெற்றுள்ளனர். யு.எஸ்.ஓ., நிதி மூலம், இரண்டாயிரம் மக்கள் தொகை கொண்ட கிராமங்களில், மொபைல்போன் கோபுரங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 27 மாநிலங்களில், 500 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, 7,289 மொபைல் போன் கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. சாதாரண தொலைபேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதால், இனி டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் புதிதாக உருவாக்கப்பட மாட்டாது. கல்வித்துறை, வங்கிகள் என, பல துறைகளிலும் இன்டெர்நெட் சேவை விரிவடைந்து வருவதால், ஐந்து லட்சம் கிராமங்களுக்கு அகண்ட அலைவரிசை இணைப்பு, 20 ஆயிரம் கோடி ரூபாய்செலவில் அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மிலிந்த் தியோரா கூறினார்.