உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகாவை கொள்ளை அடிக்கும் காங்கிரசின் 4 முதல்வர்கள்!: ஷிவமொகா பிரசாரத்தில் வெளுத்து வாங்கிய மோடி

கர்நாடகாவை கொள்ளை அடிக்கும் காங்கிரசின் 4 முதல்வர்கள்!: ஷிவமொகா பிரசாரத்தில் வெளுத்து வாங்கிய மோடி

ஷிவமொகா, மார்ச் 19- ''கர்நாடக காங்கிரஸ் அரசில், ஒரு முதல்வர் உள்ளார். அவருக்கு இணையாக வருங்கால முதல்வர், சூப்பர் முதல்வர், நிழல் முதல்வர் என பல முதல்வர்கள் உள்ளனர். இவர்கள் கொள்ளை அடிக்கும் பணத்தை வாங்கி செல்ல, டில்லியில் இருந்து, 'கலெக் ஷன் மினிஸ்டர்' ஒருவர் வருகிறார்,'' என, ஷிவமொகாவில் நேற்று நடந்த பிரசாரத்தில், காங்., கட்சியை பிரதமர் மோடி வெளுத்து வாங்கினார்.லோக்சபா தேர்தலை ஒட்டி, கடந்த 16ம் தேதி கலபுரகியில் பிரதமர் நரேந்திர மோடி, தன் முதல் பிரசாரத்தை துவக்கினார். அவர் பேசி கொண்டிருந்த போதே, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.தேர்தல் தேதி அறிவித்த பின், முதல் முறையாக நேற்று ஷிவமொகாவின் அல்லம பிரபு சுதந்திர மைதானத்தில் நடந்த பிரசார பொது கூட்டத்தில் மோடி பங்கேற்றார். இதற்காக, சிறப்பு விமானம் மூலம் ஷிவமொகா விமான நிலையம் வந்தார்.

28 தொகுதி இலக்கு

திறந்த வாகனத்தில், ஷிவமொகா வேட்பாளர் ராகவேந்திரா, தாவணகெரே வேட்பாளர் காயத்ரி சித்தேஸ்வர் ஆகியோருடன் மைதானத்துக்குள் வந்தார். மோடியை பார்த்ததும், பா.ஜ., தொண்டர்கள் மோடி, மோடி, என்று கோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில், மோடி பேசியதாவது:மாநிலத்தில், பா.ஜ., சார்பில் ஒரு பஞ்சாயத்து உறுப்பினர் கூட இல்லாத நேரத்தில், முன்னாள் முதல்வர் எடியூரப்பா கஷ்டப்பட்டு நம் கட்சியை வளர்த்தார். இதன் பலனாக, கடந்த தேர்தலில் 25 தொகுதிகளில் நாம் வெற்றி பெற்றோம்.பா.ஜ., செய்த வளர்ச்சி பணிகள் காரணமாக, இம்முறை 28க்கு, 28 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ள ஜூன் 4ம் தேதி, நாட்டில் 404 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெறுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எப்போதும் பொய்

அதில், கர்நாடகாவின் 28 தொகுதிகளும் இருக்க வேண்டும். இந்த இலக்கை நிறைவேற்றுவீர்களா. ஏழ்மையை ஒழிக்க, பயங்கரவாதத்தை அழிக்க, ஊழலை தடுக்க, விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்க, இளைஞர்களுக்கு புது வாழ்வை உருவாக்க, மகளிருக்கு நம்பிக்கை ஏற்படுத்த பா.ஜ.,வுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.ஊழலில் மூழ்கியுள்ள கட்சிகள் ஒன்றிணைந்து, 'இண்டியா' கூட்டணியை உருவாக்கியுள்ளன. எதிலும் பொய், எப்போதும் பொய், எங்கும் பொய். காலை முதல், இரவு வரை பொய் என, பொய்யான விஷயத்தை காங்கிரசார் திரும்ப திரும்ப சொல்லி, பொய் சொல்வதில் வல்லுனர்களாகி விட்டனர்.மக்களை ஏமாற்றுவதற்கு காங்கிரஸ் முன்னுரிமை அளிக்கிறது. அவர்களின் பாக்கெட்டை நிரப்பி கொள்கிறது. கொள்ளை அடித்து, கொள்ளை அடித்து, கர்நாடக அரசின் கஜானாவை காலி செய்து விட்டனர். தற்போது, ஆட்சி செய்ய பணமில்லை என்று சொல்கின்றனர்.

'கலெக் ஷன் மினிஸ்டர்'

கர்நாடக காங்கிரஸ் அரசில், ஒரு முதல்வர் உள்ளார். அவருக்கு இணையாக வருங்கால முதல்வர், சூப்பர் முதல்வர், நிழல் முதல்வர் என பல முதல்வர்கள் உள்ளனர். இதற்கிடையில், இவர்கள் கொள்ளை அடிக்கும் பணத்தை வாங்கி செல்ல, டில்லியில் இருந்து 'கலெக் ஷன் மினிஸ்டர்' ஒருவர் வருகிறார்.இவர்கள் அனைவரும், டில்லி காங்கிரஸ் தலைமைக்கு, கர்நாடகாவை ஏ.டி.எம்., இயந்திரமாக பயன்படுத்துகின்றனர். மகளிர், குழந்தைகளுக்கு இந்த அரசு அவமானம் செய்து வருகிறது.ஆனால், நாங்களோ நிலவுக்கு சென்ற, 'சந்திரயான் - 3' தரையிறங்கிய இடத்துக்கு 'சிவசக்தி' என்று பெண் கடவுள் பெயரை சூட்டியுள்ளோம். அந்த மகளிர் சக்தி, பா.ஜ.,வுக்கு பக்கபலமாக இருக்கும். அவர்களை நம் அரசு பாதுகாக்கும்.

யூகிக்க முடியாத வளர்ச்சி

மும்பையில் நடந்த இண்டியா கூட்டணி பொதுக் கூட்டத்தில், 'ஹிந்து சமுதாயத்தை ஒழிப்போம்' என்று தீர்மானம் எடுத்துள்ளனர். சிவாஜி மைதானத்தில் எடுத்த இந்த தீர்மானத்தால், ஹிந்து போராளி பால்தாக்கரே ஆன்மாவுக்கு சாந்தி கிடைக்குமா?ஜாதி, மதம், சமுதாயங்களுக்கு இடையே பிளவு ஏற்படுத்துவதே காங்கிரசின் நோக்கம். இதை பா.ஜ.,வால் சகித்துக் கொள்ள முடியாது. உக்ரைனில் போர் ஏற்பட்ட போது, ஷிவமொகாவின் ஹக்கி, பிக்கி பழங்குடியினர் காவிரி ஆப்பரேஷன் திட்டத்தின் கீழ் பத்திரமாக மீட்கப்பட்டது, இன்னும் நினைவில் உள்ளது.அதிவிரைவு வந்தே பாரத் ரயில்கள், பசுமை சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் என பல வளர்ச்சி பணிகளை நாங்கள் செய்துள்ளோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில், யாரும் யூகிக்க முடியாத வகையில், நாடு வளர்ச்சி அடையும். இதற்காக, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.உடுப்பி, சிக்கமகளூரு - கோட்டா சீனிவாச பூஜாரி, ஷிவமொகா - ராகவேந்திரா, பெங்களூரு ரூரல் - மஞ்சுநாத், தாவணகெரே - காயத்ரி சித்தேஸ்வர், தட்சிண கன்னடா - பிரிஜேஷ் சவுடா ஆகிய ஐந்து பா.ஜ., வேட்பாளர்களை பிரதமர் மோடி, அறிமுகப்படுத்தி ஆதரவு திரட்டினார்.பா.ஜ., பொது கூட்டத்தில், முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மத்திய சமூகநலத் துறை இணை அமைச்சர் நாராயணசாமி, மாநில தலைவர் விஜயேந்திரா உட்பட பலர் பங்கேற்றனர். மகனுக்கு சீட் கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, அழைப்பு விடுத்தும் பங்கேற்காமல் புறக்கணித்தார்.

புறக்கணித்த ஈஸ்வரப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை