12 மணி நேரத்தில் 40 செ.மீ., மழை: தெலுங்கானாவில் ஒருவர் பலி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
மேடக்: தெலுங்கானாவில், இடைவிடாமல் கொட்டித் தீர்க்கும் மழைக்கு ஒருவர் பலியானார். சாலை போக்குவரத்து மற்றும் ரயில் சேவை முடங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. தெலுங்கானாவில், கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. காமரெட்டி, மேடக், நிர்மல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடைவிடாமல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. காமரெட்டியின் அர்கோண்டா கிராமத்தில், நேற்று முன்தினம் காலை 8:30 முதல் இரவு 9:00 மணி வரை, 41.8 செ.மீ., மழை பதிவானது. இதனால், அர்கோண்டா மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் தனித் தீவுகளாக மாறியுள்ளன. சாலைகள் சேதமடைந்துள்ளதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நிர்மல் மாவட்டம் அக்காபூரில், 30 செ.மீ., மழை பதிவானது. இதனால், அங்குள்ள குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது-. காமரெட்டியில் வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஐந்து பேரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அரசு நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேடக் மாவட்டத்தில் கிராமங்களை மழை நீர் சூழ்ந்ததை அடுத்து, அங்கு தத்தளித்த 400க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மாவட்டத்தில், 30 கி.மீ., துாரம் மழை நீர் சூழ்ந்துள்ளதால், தேசிய நெடுஞ்சாலை 44ல் போக்குவரத்து முடங்கியது. இருப்புப் பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், பெரும்பாலான பகுதிகளில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. ஒருசில இடங்களில், குறைந்த துாரமே ரயில்கள் இயக்கப்பட்டன. மேடக்கின் பல பகுதிகளில் சிக்கியவர்கள், படகு வாயிலாக மீட்கப்பட்டு வருகின்றனர். மீட்பு பணியை விரைவுப்படுத்தும் வகையில், ராணுவ ஹெலிகாப்டர்களை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதேபோல், காமரெட்டியில் சிக்கியவர்களை மீட்கவும் ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்த அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்கு ராணுவ அமைச்சர் ஒப்புதல் அளித்தார். இதற்காக, ஹைதராபாதின் ஹக்கிம்பேட் விமானப் படை தளத்தை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.